Thursday, February 05, 2009

சுதந்திரத் திருநாட்டில் ஓர் சுதந்திர நாள்

சுதந்திரமடைந்து 61 வருடங்கள் ஆகிவிட்டதாக சொல்லப்பட்டாலும் எனக்கென்னவோ நேற்றிலிருந்து தான் சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் நிலைக்கு நாங்கள் வந்து விட்டதாக தோன்றுகிறது.. இல்லையா பின்னே.. நாட்டை அழித்த பயங்கரவாதிகள் அழித்து ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில் இனித் தானே நாங்கள் சுதந்திரமாக நடமாடலாம்.. எங்கள் கருத்துக்களைப் பகிரங்கமாக கூறலாம்..

உலகெங்கும் சிறப்பாக சுதந்திரதினத்துக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட கொண்டாட்டங்களை கண்டு மகிழ்ச்சியடைந்த எங்கள் தலைவர் வெளிநாடுகளில் வாழும் இலங்கை மக்களை, அமைதி திரும்பிய நாட்டுக்கு அழைக்கிறார்.. செவி சாய்ப்பீர்களா?

நேற்றைய சுதந்திர தினத்தில் எங்கள் மதிப்புக்குரிய, மேன்மை தங்கிய இன்னும் பல அடைமொழிகளைத் தன்னகத்தே கொண்ட, அடைமொழிகளுக்கெல்லாம் பெருமை சேர்க்கும் கெளரவ மகிந்த ராஜபக்ஷே அவர்களின் உரையை கேட்டு புளகாங்கிதமடைந்ததன் விளைவு, சுதந்திர திருநாட்டின் குடிமகளான நான் இனியும் புனைபெயர் கொண்டிராது என் சொந்தப் பெயரில் வருடத்துக்கு ஓரிரு தடைவை தான் நானே எட்டிப்பார்க்கும் இந்தப் வலைப்பதிவை கொண்டு நடாத்த முடிவெடுத்திருக்கிறன்.. ஆக பாவை என்ற பெயரில் 3, 4 வருடங்களாக எழுதப்பட்டு வந்த இந்தப் பதிவு இன்று முதல் சாயினி ஆகிய என்னால் தான் கொண்டு நடாத்தப்பட்டிருக்கிறது (எங்க நடாத்தப்பட்டிருக்கிறது) என்ற செய்தியை உலகெங்கும் வாழும் அறிந்த அறியாத எல்லாருக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கிறேன்.


வன்னி மண்ணில் வித்தை காட்டி அலுத்துப் போன எங்கள் முப்படையினரும் காலிமுகத்திடலிலும் இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் தொலைக்காட்சி வழியாகவும் வித்தை காட்டினர்.. விமானப்படையின் பறப்பு வித்தையை பல காலங்களின் பின் நேரில் பார்த்து இரசிக்க கிடைத்தது என் பாக்கியம்..

சுதந்திரதினக் கொண்டாட்டத்துக்காக 3ம் திகதி வகுப்பு இல்லை என்று சொல்ல விரும்பாத ஒரு வாத்தியார் இலங்கை இந்திய 3வது ஒருநாள் சர்வதேச போட்டியை முன்னிட்டு எங்களுக்கு peace of mind இருக்காது என்ற காரணத்தால் வகுப்பு இல்லை என்று அறிவிக்க அடுத்த வாத்தியாரோ சுதந்திரதினத்தன்று காலை 8 முதல் 1 வரை மேலதிக வகுப்பு என அறிவித்திருந்தார். சுதந்திரத்தன்று கூடவா சுதந்திரமாக நடமாட முடியாது என்று எண்ணினார் போலும்.. அறிவித்த பின்னர் தான் அன்று காலை சுதந்திரமாக நடமாட முடியாது என்று தெரிந்து கொண்டவர் காலையில் வீதிகள் மூடப்படுவதால் மதியத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தொலைபேசி, மின்னஞ்சல், குறுஞ்செய்தி என எல்லாவிதத்திலும் அறிவித்திருந்தார்.. மனுஷன் இந்தளவு கஷ்டப்பட்டு வகுப்பு வைக்குதே என்று போனால், வீதி வெறிச்சோடிப் போயிருந்தது..

ஆனாலும் எங்கெங்கு காணினும் இலங்கைத் திருநாட்டின் தேசிய கொடிகள் கண்ணுக்கு குளிர்ச்சியைக் கொடுக்க வெள்ளவத்தை வந்தவுடன் கண்ணை மூடவே முடியாதளவுக்கு குளிர்ச்சி தாங்க முடியாமல் போயிற்று... வீதியில் சென்ற வாகனங்கள் தத்தம் தேசப்பற்றிற்கு ஏற்ப பல அளவுகளில் கொடிகளை பறக்க விட்டிருந்தார்கள்.. சுதந்திரக் காற்றை அதிகமாக சுவாசிப்பதாலோ என்னவோ வெள்ளவத்தைவாசிகள்(?) தங்கள் கடைகளையும் வீதிகளையும் மிக நன்றாக அலங்கரித்திருந்தார்கள். தேசப்பற்றை எண்ணி ஆனந்தக் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் இருந்தவளை பம்பலப்பிட்டி சந்தியில் நடத்துனர் தட்டி, கொள்ளுப்பிட்டிக்கு எங்க போகிறாய், இது போகாது.. இங்கேயே இறங்கி விடுங்கள் என்று சொன்னது, கட்டுப்படுத்த வைத்தது..

இலங்கையின் தமிழ்க் குடிமகளாக சுதந்திரத் திருநாட்டில், கொழும்பின் இதயமெனப்படும் கொள்ளுப்பிட்டியின் சுதந்திரக்காற்றை சுவாசிக்கக் கிடைத்த பேற்றினை நினைத்தும் நட்ட நடு வெயிலிலும் நடைப்பயிற்சி உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று மகிந்த அரசு எனக்கு புரிய வைக்க எடுத்த முயற்சியை எண்ணி மகிழ்வுற்றும் நடக்க ஆரம்பித்தேன்..
வெறிச்சோடி இருந்த வீதிகளையும் மூடப்பட்ட கட்டடங்களையும் தனியே இரசித்து சென்ற வேளை, சோதனை சாவடியில் நின்ற இராணுவத்தினர் மட்டும், இல்லை பிள்ளை.. நாங்களும் இதையெல்லாம் காலையிலிருந்து இரசித்துக் கொண்டிருக்கிறோம் கூறுவது போல் ஆறுதளித்தனர்..

என்ன தான் போக்குவரத்தில் பிரச்சினை இருந்தாலும் வகுப்பிற்கு கணிசமான மாணவர்கள் வந்திருந்தது உண்மையில் சுதந்திரக்காற்றை சுவாசிக்கிறமோ அல்லது எது நடப்பினும் எதிர்கொள்ள தயாராகி விட்டோமோ என்று யோசிக்க வைத்தது.. ஆனாலும் 1 மணி வகுப்பிற்கு வழமையாக 12.45 க்கு வந்து விடும் நேரம் தவறாமையை அதீதமாக கடைப்பிடிக்கும் எங்கள் வாத்தியார் நான் நடந்து சென்றதால் தாமதமாக போயிருந்ததை விட தாமதமாக வந்திருந்தார்.. காரில் வந்தவரையும் போக்குவரத்து பாதிச்சிருக்கிறது என்பது மகிந்த அரசின் பாரபட்சம் பாராமையை வெளிப்படுத்தியது..

வகுப்பு முடிந்து வெளியே வரும் போது பாதை திறக்கப்பட்டு ஓரிரு வாகனங்கள் ஓட ஆரம்பித்திருந்தன.. நடமாட்டம் அற்ற வீதிகளைத் தாண்டி வெள்ளவத்தை, தெகிவளையை அடைந்த போது ஓரளவு நடமாட்டம் இருந்தது.. எங்கள் மக்கள் யார்? சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் மக்களல்லவா? எது நடந்தாலும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவது எங்களைத் தவிர யாரால் முடியும்?

யாழ்ப்பாணத்து மக்களும் அலங்கரிக்கப்பட்ட வீதிகளில் வாசஸ்தலங்களில் தேசியக் கொடிகளை பறக்கவிட்டு சுதந்திரநாட்டு பிரஜைகளாக தங்களை காட்டிக் கொண்டதாக கேள்வி..

வாழ்க சுதந்திரம்.. வாழ்க ஜனநாயகம்...