Thursday, November 10, 2005

தடை செய்யப்பட்ட கவிதையிலிருந்து.....

சாதாரணமாக நூலகத்திற்குச் செல்லும் போது இந்திய எழுத்தாளரது புத்தகம் ஒன்று எடுத்தால் ஈழத்து எழுத்தாளர்/வளர்ந்து வரும் எழுத்தாளாரின் புத்தகம் ஒன்று எடுக்க வேண்டுமென நினைத்திருப்பேன். என்றாலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவ்வாறு முடிவதில்லை. வாசிக்க வேண்டுமென முதலே நினைத்த புத்தகம் கண்ணில் பட்டால் பிரித்துக் கூட பார்க்காமல் எடுத்து வந்து விடுவேன். அவ்வாறு இல்லாமல ஒரு ஈழத்து புத்தகம் எடுத்த பின்னரும் இன்னொரு புத்தகம் எடுக்கும்படி தூண்டியது இந்தப் புத்தகத்தின் தலைப்பு. (அவ்வாறு தூண்டுவதற்காகவே மு.மேத்தாவினால் மப்ரூக்கிற்கு அந்தத் தலைப்பையே புத்தகத்தின் தலைப்பாக வைக்கும்படி கூறப்பட்டிருந்ததாம்.)
புத்தகம் பெரிதாக என்னைக் கவரவில்லை என்றாலும் ஒரு சில கவிதைகள் பிடித்துப்போயின. அதில் ஒன்று.
பிரிவு

என்றாயினும் ஒரு நாள்
நாம் பிரிய வேண்டியவர்களே..
நாளை அன்றி
நாளைகளுக்கு நாளையாயினும்...

உறவினரால் மரணத்தால்
மாறாய்
நம்மால் கூட
அந்தப்பிரிவு நிகழலாம்
ஒளியை நிலவு இழப்பது மாதிரி
உன்னை நானோ..என்னை நீயோ...
என்றாயினும் ஒருநாள் அது நிகழ்ந்து போகலாம்.

சில அஞ்சல்களாலும்
அழுவதனாலும்
ஸ்பரித்த ஞாபகங்களை
மீள ஸ்பரித்துப் பார்ப்பதனாலும்
வெற்றுப் பிரார்த்தனைகளாலும்
நிகழாமலிருக்கப் போவதில்லை அது

என்றாயினும் அது நிகழும்..
நாளை அன்றி நாளைக்கு நாளையாயினும்
கண்ணீர் உகுப்பாயா அவ்வேளை?
அன்றி
முன்பெல்லாம் உன்மேல் பூத்தூவிய
அதே தேவதைகளை
சாமிட்டுத் தொலைப்பாயா?

மெல்லிய தென்றலுக்கே உதிர்ந்து போகும்
அதி மெல்லியதொரு பூவின் இதழுதிர்வாய்
இந்தப் பிரபஞ்சத்தின்
தவிர்க்க முடியாத சில சலனங்களில்
நம் பிரிவு அது நிகழ்ந்தே தீரும்
உறவினரால் மரணத்தால்
மாறாய்
நம்மால் கூட
அந்தப் பிரிவு நிகழலாம்
விரும்பி சிலவேளை
நாம் விரும்பாமல் கூட

அழுகை புலம்பல் சாபம்
இவைகளின் திரை நீக்கி
திறந்து பார்க்கின்..
வந்தே தீருமென்றானதொன்றை
வரவேற்று...............
....................................................
பிரிவும் ஓர் அனுபவமாய்
அறிந்து கொள்ளுமோ மனம்?

அப்போ
நேசங்கள் ஞாபகித்து
ஞாபகங்களை நேசிக்க
உறவும் பிரிவும் காதலிலே
ஒன்றென்றறிவாய் நீ

-மப்ரூக்-

Wednesday, November 09, 2005

நான் வாக்குப் போடப் போறேன்.

முதல் முதலாக நான் வாக்குப் போடப் போறேன். வீட்டில கடைசிப்பிள்ளையாகப் பிறந்ததாலையோ என்னவோ என்னை எல்லோரும் சின்னப்பிள்ளையாகவே நடத்திறதைக் கண்டு கவலைப்பட்டுக் கொண்டிருந்த எனக்கு ஆறுதல் அளிக்கிற மாதிரி வாக்குச் சீட்டு வந்து சேர்ந்து இருக்குது. ரொம்ப சந்தோஷம். இருக்காதா பின்னே.. நாட்டின் ஜனாதிபதியையே தேர்ந்து எடுக்கிற உரிமை எனக்கு இருக்குது எண்டால் வேற எதுக்குத் தான் இல்லை? :-)

மூன்று வருடங்களுக்கும் மேலாக வீட்டுக்காரர் விண்ணப்பம் அனுப்பியிருந்தாலும் கடந்த தேர்தல்களில் வாக்களிப்பதற்காக அவர்களுக்கு வாக்குச் சீட்டு வரவேயில்லை. இந்த முறை என் பேர் இருக்கிற ராசியோ என்னவோ எல்லோருக்கும் வந்திட்டுது. :-) (பெரும்பான்மையான தமிழ்மக்களுக்கு மட்டும் திட்டமிட்டு வாக்குச்சீட்டினை அனுப்பாமல் இருந்ததாகவும் மகேஸ்வரன் எம்.பி மற்றும் கொழும்பு மாவட்டத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் முயற்சியின் விளைவாகவே இந்த முறை அனுப்பப்பட்டதாகவும் அறிகிறேன்)

எங்களுக்கு வாக்குச் சீட்டு வருகிறதோ இல்லையோ வாக்குப் போடச் சொல்லி தொலைபேசி மூலம் விடுக்கப்படுகிற வேண்டுகோள்களுக்குக் குறைவிருப்பதில்லை. இந்த முறை மட்டும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு போடச் சொல்லி நான்கு தரம் தொலைபேசியினூடு கேட்டிருந்தார்கள். வாக்குச்சீட்டு வர முதல் தான் அவர்கள் அழைப்பு எடுத்திருந்தார்கள். நானும் வெகு கூலாக "உங்களுக்கு போடுறது பிரச்சினையில்லை. எங்களுக்கு வாக்குச்சீட்டு வராதென்றே நினைக்கிறேன். ஏனென்றால் கடைசி இரண்டு தேர்தல்களுக்கும் நடந்த மாதிரித் தான் நடக்கும். அதால எங்களுக்க வாக்குச் சீட்டு வந்தால் தான் யோசிக்கலாம்" என்றேன். அவர்கள் வெகு சிரத்தையோட வாக்குச் சீட்டு வராட்டா எப்பிடி பெற்றுக்கொள்றதென்று விபரமாக சொன்னார்கள். என்ன ஒரு சிரத்தை???

வாககுச் சீட்டு வந்தால் என்ன... விட்டால் என்ன.. என்ற நிலையில் தான் பெருமளவான தமிழ் மக்கள் தேர்தலில் அக்கறையில்லாமல் இருக்கிறார்கள். நானெல்லோ முதல் முறையென்றதால துள்ளுறன். :-)

எனக்கு வாக்குச் சீட்டு அனுப்பிட்டாங்க... வாக்குப் போடப் போறேன்.. என்று சந்தோஷப்படுகிறேனே யாருக்குப் போடப் போகிறேன்??????

வரப்போற இரண்டு கழுதைகளில எந்தக் கழுதை நல்ல கழுதை (மன்னிச்சுக்கோங்க நிஜக் கழுதைகளே.. நீங்கள் ரொம்ப நல்லவங்க..) என்று பார்த்துப் போடுறதா?

இல்லை வாறது இரண்டுமே கழுதை தானே எந்தக் கழுதை வந்தா எனக்கென்ன என்று தேர்தலைப் பகிஷ்கரிக்கிறதா? (யாழப்பாணத்தவருக்கு தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி கூறப்பட்டுள்ளதாம். புலிகள் இல்லை.)

இரண்டு கழுதைகளையும் விட மிச்சம் இருக்கிறவர்களில் யாருக்காவது போடுறதா? (சித்தாலேப வைத்தியர் விக்டர் ஹெட்டிகொடவைத் தவிர வேற யாரையும் எனக்குத் தெரியாது)

இதை விட வேற option எனக்கு இல்லை.

இரண்டு கழுதைகளில எந்தக் கழுதையும் எதுவும் செய்யப்போறதில்லை. இப்ப இருக்கிற மாதிரித்தான் (சண்டையும் இல்லை.. சமாதானமும் இல்லை) நிலைமை தொடரப் போகுது. ஆக இந்த இரண்டில ஒண்டுக்குப் போடுறதால எதுவும் ஆகப்போறதில்லை.

முதல் முதலா வோட்டு வந்திருக்கு. அதால எனக்கு பகிஷ்கரிக்கவும் விருப்பம் இல்லை. பகிஷ்கரிக்கிற ஆக்கள் கள்ளவோட்டுப் போடுவதற்கு உதவி செய்கிறார்கள். பின்னே போடாத வோட்டுக்களை விட்டு வைப்பாங்களா? கட்டாயம் அது யாருக்கோ போடப்படத் தான் போகுது.
அதோட Mercantile holiday இல்லை என்று சொல்லி எனக்குத் தீபாவளிக்குக் கூட விடுமுறை தராதவங்க தேர்தல் தலைமைச்செயலகம் அமைந்துள்ள ராஜகிரிய வீதியினூடாக செல்ல வேண்டியிருப்பதால் சனி... ஞாயிறு உட்பட தொடர்ந்து நான்கு நாட்களுக்கு (ஆமா அப்பிடித்தான் Notice board இல் போட்டிருக்கு) விடுமுறை விட்டிருகிறார்கள். அதால நான் வோட்டுப் போடத் தான் போறேன்.

குறைஞ்சது மக்களுக்காக சித்தாலேபயைத் தந்தவருக்கு(மற்றவர்கள் எதுவுமே செய்யேலையே) போடலாம் என்றால் அதால என்ன பயன்? பாராளுமன்றத் தேர்தலென்றாலும் பரவாயில்லை.. வாக்குகளைச் சிதறடிக்கிறன் பேர்வழி என்று கிளம்பலாம்.
என்றாலும் சித்தாலேப வைத்தியர் நாட்டுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் நிறையச் செய்யப்போகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அப்பிடிப் பார்த்தால் யார் தான் சொல்லல...

Only words, no deeds. . இது தானே எங்க அரசியல்வாதிகள்.

ஆக முதல் முதலா எனக்கு வந்த வோட்டை என்ன செய்றதென்று எனக்குப் புரியவேயில்லை. ஒரு கிழமைக்குள் எடுப்போம் ஒரு முடிவு. (ஆமா.. பெரிய முடிவு.. )

பி.கு: இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பதென்று தீர்மானத்தை தமிழ் மக்கள் தாங்களே சுயமாக சிந்தித்து எடுக்குப்படி புலிகள் கூறியிருக்கிறார்கள்.

Sunday, October 30, 2005

இலங்கையர் ஒருவரை இனங்காண்பது எப்படி?

இலங்கையரை எவ்வாறு இனங்காண்பது என்ற தலைப்புடன் இலங்கையர் அல்லாதவருக்கு முன் செலுத்த வேண்டாம் என்ற வேண்டுகோளோட எனக்கு வந்த முன்செலுத்தப்பட்ட மடல் (இந்தத் சொல்லுக்காக சிகிரிக்கு நன்றி) ஒன்றிலிருந்து...

இலங்கையர்கள்:
1)சாப்பிடும்போது வெங்காயம், மிளகாய், பூண்டு உட்பட எல்லாவற்றின் சுவையையும் ரசித்து சுவைத்து உண்டு தட்டைக் காலி பண்ணிடுவார்கள்.
2)பரிசுப் பொருட்கள் வைச்சுத் தந்த பெட்டி அதைச் சுத்தி வந்த பேப்பர், அலுமினியக் கடதாசி எல்லாத்தையும் எடுத்துப் பிறகு பாவிப்பதற்காக பத்திரமாக வைப்பார்கள்.
3)பல்லில மாட்டிக் கொண்ட உணவுத் துணிக்கைகளை tshick, tshick என்று சத்தம் வர எடுப்பார்கள்.
4)விமான நிலைய வாசலில இரண்டு மிகப் பெரிய சூட்கேஸ்களோட நின்று கொண்டிருப்பார்கள்.
5)Party ஒன்றுக்கு ஒன்றிரண்டு மணித்தியாலம் பிந்திப் போவதோட அது normal என்றே நினைப்பார்கள்.
6)தவறுதலாக முத்திரை குத்தாம வாற தபால் தலைகளை கவனமாக பிய்த்து எடுத்து வைப்பார்கள்.
7)குளியலறையில கண்டிப்பாக கை கழுவுவதற்கு ஒரு பிளாஸ்ரிக் பாத்திரம் ஒன்று இருக்கும்.
8)தன் பிள்ளைகளுக்கு ஒரே உச்சரிப்போட(rhythm) கூடின மாதிரியான பெயர்களை வைப்பார்கள். (உதாரணத்துக்கு சுரேஸ், ரமேஷ், தினேஸ்)
9)பிள்ளைகளினது உண்மையான பெயர்களுக்கு சம்பந்தமில்லாமல் செல்லப் பெயர் ஒன்று வைத்துக் கூப்பிடுவார்கள்.
10) "இங்கு உணவு, நீர் அனுமதிக்கப்படாது" என்று பெயர்ப்பலகை மாட்டப்பட்ட இடங்களுக்கும் நொறுக்குத் தீனிகளை எடுத்துச் செல்வார்கள்.
11)வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் விடை பெறும்போது வாசலில் வைத்து மணித்தியாலக் கணக்காக கதைத்துக் கொண்டிருப்பார்கள்.
12)காரில் எவ்வளவு பேரை ஏற்ற முடியுமோ அவ்வளவு பேரை ஏற்றி செல்வார்.
13)புதிதாக வாங்கிய பொருட்களை (remote control, VCR, carpet or new couch.) பிளாஸ்ரிக் கவரால மூடி கவனமாக வைத்திருப்பார்கள்.
14)தன் பிள்ளைகளிடம் நண்பர்கள் சொல்வதைக் கவனத்திற் கொள்ள வேண்டாமென்று சொல்லும் பெற்றோர்கள்; மற்ற "Uncles And Aunties" என்ன நினைப்பார்களோ என்பதற்காக பிள்ளைகளைச் சில விஷயங்களைச் செய்ய விட மாட்டார்கள். ;
15) Rice cooker வைத்திருப்பது முக்கியமானது.
16)நாப்பது வயதானால் கூட தங்கள் பெற்றோருடனேயே வசிப்பார்கள். பெற்றோரும் அதையே விரும்புவார்கள்.
17)தங்கட மகளாக இல்லாட்டா யாருடைய மகள் யாருடைய மகனோட ஓடினது என்பதைத் தெரிஞ்சிருக்க விருப்பம் காட்டுவதோட அதை மற்றவர்களுக்குப் பரப்புவதைத் தம் கடமையாக நினைப்பார்கள்.
18)தொலைதூர அழைப்புகளை இரவு 9 மணிக்கப் பிறகே (Off-peak hours)
எடுப்பார்கள்.
19)பெற்றோருடன் வீட்டில் இல்லாமல் வேறு இடத்தில் வசித்தால், பெற்றோர் தொலைபேசியில் கதைக்கும் போது அது நடுச்சாமமாக இருந்தாலும் சாப்பிட்டாயிற்றா எனக் கேட்க மறக்க மாட்டார்கள்.
20)இலங்கையர் ஒருத்தரை சந்தித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தால் எந்த ஒரு வகையிலோ அவர்கள் தம் உறவினர் என கண்டுபிடித்து விடுவார்கள்.
21)வெளிநாட்டில் உள்ளவர்களோடு தொலைபேசியில் பேசும் பெற்றோர்கள் அவர்களுக்கு கேட்பதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு கத்திக் கதைப்பார்கள்.
22)சோபாவில் அழுக்குப்படாமல் இருப்பதற்கு பெட்சீற்ஸ் போட்டு வைத்திருப்பார்கள்.. அதே நேரம் அவர்களது பெட்ல இருக்கிற சீட்ல (sheet) தண்ணீர் பட்டு மாதக்கணக்காக இருக்கும்.
23)திருமண வைபவத்தில் 600 பேருக்குக் குறைவாக வந்திருந்தால் சங்கடமாக உணர்வார்கள்.
24)திருமணப் பேச்சின் போது தங்கள் பெண் உண்மையாக எப்படி இருந்தாலும் மெல்லிய அழகான பெண் என்றே சொல்லுவார்கள்
25)எப்பொழுதுமே மற்றவர்களுடைய சொந்த விஷயங்களில் மூக்கை நுழைப்பதற்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் எங்கே போகிறார்கள் என்பதை அறிவதற்கு விருப்பம் காட்டுவார்கள்.
இதை வாசிக்கும் உங்களுக்கு இதில் பல பொருந்துகிறதா? அப்படியானால் நீங்கள் ஒரு இலங்கையர் ( + தமிழரென்று சொல்லலாமெனவே நான் நினைக்கிறேன்) என்பதில் சந்தேகமே இல்லை.

Wednesday, October 19, 2005

புத்த பிக்குவோடு ஒருநாள்........

யாழ்ப்பாணத்தில் நான் இருக்கும் மட்டும் புத்த பிக்குககள் எவரையும் நேரில் கண்டதில்லை. ஐந்து வயதிலிருந்து கொழும்பு வரும் வரை யாழ்ப்பாணத்தில் மின்சார வசதி இல்லாததால் தொலைக்காட்சியிலும் பார்த்ததில்லை. புத்தகங்கள் மூலமாக சித்தார்த்தர் புத்தராக மாறியதைத் தவிர வேறு எதுவும் புத்த மதத்தைப் பற்றியோ பிக்குகளைப் பற்றியோ அறிந்திருக்கவில்லை.

பத்திரிகைகளிலிருந்தும் நான் வளர்ந்த சூழலிலிருந்தும் புத்த பிக்குகள் எல்லோரும் தமிழருக்கு எதிரானவர்கள், மதம் மேல் தீவிர பற்றுள்ளவர்களாகக் காட்டிக் கொள்ளும் இனவெறியர்கள்.. அவ்வளவு தான்.

அப்பவெல்லாம் நாங்கள் சின்னப்பிள்ளைகள் சேர்ந்து
“புத்தம் சரணம் கச்சாமி
புத்தற்ற ----------- கிச்சாமி
-------------------------------------------
-------------------------------------------” என்று புத்தம் சரணம் கச்சாமியின் வரிகளை மாற்றி கேலியாகப் பாடுவோம்..

பின்னர் புத்த மதத்தைப் பற்றிய எனது கருத்துகள் மாறினாலும் எனக்குள் வேறூன்றிப் போயிருந்த வெறுப்பின் காரணமாக இப்போதும் புத்த பிக்குகள் மதிக்கப்படவேண்டியவர்கள் என்று என்னால் கருதவே முடியவில்லை. உண்மையாக புத்த மதம் கூறுவது போன்று அதனைப் பின்பற்றி நெறிப்படி வாழும் பிக்குகள் இருந்தாலும், வறுமையின் நிமித்தம் பிக்குகளாக மாற்றப்படும் சிறுவர்கள், கேவலமான அரசியல்வாதிகளுக்குத் தாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்களில்லை என்ற மாதிரியாக செயற்படும் “ஹெல உறுமய” பிக்குகள் போன்றோர், அஹிம்சையை வலியுறுத்திய புத்தபகவானின் பெயரைக் கூறி ஆர்ப்பாட்டம், அடிதடிகளில் ஈடுபடும் பிக்குகள், போன்றோரை பற்றி அடிக்கடி அறிவதாலும் பார்ப்பதாலுமோ என்னவோ அந்த எண்ணம் இன்னும் வலுப்பெறுகிறது.

கொழும்புப் பேரூந்துகளில் முதல் இருக்கை மதகுருமார்களுக்காக ஒதுக்கப்பட்டிருப்பது வழமை.. போக்குவரத்துக்காக 98% பேரூந்துகளைத் தான் பயன்னடுத்துகிறேன், என்றாலும் அந்த இருக்கையில் பிக்குகளைத் தவிர வேறு மதகுருமார்கள் அமர்ந்து நான் பார்த்ததில்லை.(மற்றைய மதகுருமார்கள் பஸ்ஸில் பயணம் செய்வதில்லையோ?)

இப்பிடித்தான் ஒருக்கா நான் பள்ளிக்கூடத்துக்குப் பஸ்ஸில போய்க் கொண்டிருந்தேன். எல்லா இருக்கைகளும் நிரம்பியிருந்தாலும் பெரிசாக் கூட்டமில்லை. ஓரிருவர் தான் நின்று கொண்டிருந்தார்கள். அடுத்த தரிப்பில் பஸ் நிற்க பிக்கு ஒருவர் ஏறினார். “மதகுருமார்களுக்கு” என்று ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் இருந்த இரு ஆண்களில் ஒருவர் எழும்பி நின்று கொள்ள பிக்கு அமர்ந்தார்.
இரண்டு தரிப்புகளுக்குப் பிறகு பிக்கவுக்குப் பக்கத்திலிருந்த மற்றையவர் இறங்கிச் சென்றார். பிக்கவுக்குப் பக்கத்து இருக்கை காலியாக இருந்தது. அந்த இருக்கைக்கு பக்கத்தில் தான் நான் நின்று கொண்டிருந்தேன். கூட்டமில்லாத பஸ்ஸில் நின்று போவதையே விரும்பும் நான் யாராவது இருக்கட்டும் என்று பேசாமல் நின்றேன். யாரும் இருக்கவில்லை. காலியாக இருக்கை உள்ள போது இருக்காமல் நிற்பது சரியில்லையே.. கனத்த புத்தகப்பை வேற இருக்கச் சொல்லியது.. இருக்கவா? என்று யோசிச்சேன். பிக்குவுக்குப் பக்கத்தில இருக்கலாமோ என்று தெரியவில்லை. முதல்ல ஒருத்தர் இருந்திட்டுத் தானே எழும்பிப் போனாரெண்டு நினைச்சுப் போட்டு போய் இருந்திட்டன். பிக்கு ஒருமுறை என்னைப் பார்த்திட்டு பேசாம தன்ர பாட்டில இருந்தார். பஸ்ஸில ஒரே சலசலப்பு. எனக்கு பின்னாலிருந்த சிங்களப் பெண்மணி என்னவோ சிங்களத்தில் சொன்னார். கூர்ந்து கவனிக்காட்டா எனக்குச் சிங்களம் கொஞ்சமும் புரியாது.. வேற யாரோடையோ கதைக்கிறாவாக்கும் என்று நினைச்சிட்டுப் பேசாமல் இருந்திட்டன். அவ விடலே.. திரும்ப என்னைத் தட்டி “துவ.. அதில இருக்கக் கூடாது, எழுந்திரும்” என்று சொன்னா..

செய்யக்கூடாததை செய்திட்டேனே என்று எனக்கு என்னவோ போல ஆச்சு. டக்கெண்டு எழும்பிட்டன். முதல் இருக்கை என்றதால பஸ்ஸில் இருந்த எல்லோருமே இருந்ததையும அவ சொன்னதையும் நான் எழும்பினதையும் பார்க்கலாம். நான் தான் அவமானப்பட்டிட்டன் பரவாயில்லை என்று விட்டாலும் பாடசாலை உடையோட நின்றதால என் பாடசாலையையும் ..........................

அதற்குப் பிறகு நண்பர்கள் சொன்னார்கள், பிக்குவுக்குப் பக்கத்தில பெண்கள் யாரும் இருக்கக் கூடாதாம்.. ஆண்கள் வேணுமென்றால் இருக்கலாமாம் என்று. எனக்கெண்டா இது ஏனென்று புரியவேயில்லை. பெண்கள் பக்கத்தில் இருந்தால் அவர்கள் பிக்குகளாக இருப்பதன் புனிதம் கெட்டுப் போய் விடுமோ?

அந்த சமயத்தில், இந்தியாவில் பஸ்ஸில் ஆண்களுக்கு வேறாகவும் பெண்களுக்கு வேறாகவும் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அது தெரியாமல் நடந்து கொண்ட இலங்கையர் ஒருவர் வயது முதிர்ந்த பெண்மணி ஒருவரிடம் ஏச்சு வாங்கியதாகவும் அதை பார்த்த நண்பர் ஒருவர் சொன்னது ஞாபகத்துக்கு வந்து போனது.

Wednesday, October 05, 2005

பிடித்ததில் ஒன்று

என் காதலால் உனக்கு எவ்விதத் தொல்லையும்
உண்டாகாத வண்ணம் உன்னை நான் அப்படிக்
காதலிப்பேன்; இணை பிரியாது
எந்நேரமும் உன்னுடன் ஒட்டிக்கொண்டு
ஓர் இதயம் இயங்குகிறது
என்பதைத் தவிர……

நன்றியுணர்வுடைய நேசமும்
பாசமும் கொண்ட ஓர் இதயம்
என்றும் உனக்கே உரியதாயிருந்து….

உனக்காக எதுவும் செய்யத் தயாராயுள்ள
ஓர் இதயம் உன்னுடன் இணைந்து
இயங்குகிறது என்பதைத் தவிர..

வேறு எதுவும் உனக்கு தெரியாதபடி…
அப்படி உன்னைக்
காதலிப்பேன்.


-மயோதர் தாஸ்தவேய்ஸ்கி-
(வெண்ணிற இரவுகள்)

Saturday, September 24, 2005

என் கணித ஆசிரியர்கள்.

பாவையின் பக்கம்

நான் இப்ப கணிதம் படிப்பிக்க வெளிக்கிட்டிருக்கிறன். அதால எனக்கு கணிதம் படிப்பிச்சவங்களை சும்மா நினைச்சுப் பார்த்தன்.

எனக்குச் சின்ன வயசில இருந்தே கணித பாடமென்றால் அப்பிடி ஒரு விருப்பம். நிறையப்பேர் மாறித்தான் சொல்லுவினம்.. அவை அப்பிடிச் சொல்லேக்க ஏன் இவைக்கு கணித பாடம் பிடிக்கேறல என்று எனக்குள்ளேயே குழம்பிக் கொள்வேன். நான் அவையை ஏன் உங்களுக்கு பிடிக்கேல என்று ஒருக்காலும் கேட்கேல. என்டாலும் அவையை ஒரு இளக்காரமாத் தான் பார்ப்பன். விவரம் தெரியாத வயசில மட்டுமில்ல இப்பக் கூட என்னால அப்பிடி இளக்காரமாக பாக்கிறதை விட முடியல. (ஆமா.. இப்ப மட்டும் விபரம் தெரியுதாக்கும்..)

ஆரம்பப் பள்ளியில் மூண்டாம் ஆண்டு வரை கணிதத்துக்கெண்டு தனிய ஒருத்தர் இல்லாம எல்லாப் பாடமும் ஒருத்தர் தானே படிப்பிக்கிறது.. அதால அவையை விட்டிடுறன். நாலாம் ஐஞ்சாம் வகுப்பில எனக்கு கணிதம் படிப்பிச்சது ஆறுமுகம் வாத்தியார்.
ஆறுமுகம் வாத்தியாரின்ர பேரைக் கேட்டாலே பெடியளுக்கு உதறும். அப்பிடிப் பொல்லாதவர் என்று பேர் பெற்றவர்.

இந்தப் பதிவு எழுதுறதுககு அவர் சொன்ன ஒரு கருத்துத் தான் முக்கிய காரணம். அது என்னென்டா… இப்பக் கிட்டடியில வந்த A/L results ஐக் கேட்டிட்டு அவர் சொன்னாராம். “ஐஞ்சாம் ஆண்டில என்ன கெட்டிக்காரராக படிச்சதுகளெல்லாம் இப்ப இப்பிடி குறைய எடுத்து வெச்சிருக்குதுகளே” என்று. எனக்கெண்டா கேட்டவுடனேயே சிரிப்பு வந்திட்டு. எங்கட யாழப்பாணத்துப் தாய் தேப்பன்மார் ஓ எல் மட்டும் பெடியள் கெட்டித்தனமாகப் படிச்சவுடனே தங்கட பெடியள் டொக்டர் அல்லது எஞ்சினியராத் தான் வரவேணும் எண்டு Bio அல்லது Maths தான் படிக்க விடுவினம். தாய் தேப்பனைச் சொல்லியென்ன.. பெடியளே அதை விட்டு வேற எதுவும் படிச்சாக் குறைவு என்டு தான் நினைக்குதுகள். (நானும் அப்பிடித் தான் நினைச்சன். அதோட நான் பெரிய Maths காய் என்ற நினைப்பு வேற. படிக்க நினைக்கிறது தப்பில்லை. கஷ்டப்பட்டு படிக்கிறவர்களால மட்டும் தான் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற முடியும் என்றதை மனசில வைச்சுப் படிக்க வேணுமே)

ஆறுமுகம் வாத்தியாரின்ர நுள்ளுத்தான் ரொம்ப பேமஸ். எனக்குத்தான் அவரிட்ட நுள்ளு வாங்க குடுத்து வைக்கல. ஆனாலும் ஒரே ஒருக்கா அடி வாங்கக் கிடைச்சுது. கொஞ்ச நாள் ஸ்கொலர்சிப் வகுப்பெண்டு பின்னேர வகுப்பு வைச்சவர். அதுக்கெண்டு வேற கொப்பி. ஒருநாள் வீட்டுவேலை (அதாங்க home work) தந்து விட்டவராம். எனக்கு அந்த வீட்டுவேலை தந்து விட்டதும் தெரியாது.. கொப்பியும் கொண்டு போகல.. வழமையாக முன்னுக்கு இருக்கிறதால என்னிட்டத் தான் உதைப்பற்றின விசாரிப்பெல்லாம் நடக்கும். அண்டைக்கும் நான் முன்னுக்கு இருக்கிறன். கடைசி வகுப்பில என்ன செய்ததெண்டு கேட்டார். நானும் பாக்குக்குள்ள தேடித் தேடிப் பார்க்கிறன் கொப்பியைக் காணல.. கடைசி வகுப்பில என்ன செய்ததெண்டு ஞாபகமும் வருதில்ல. அதுக்குள்ள பின்னுக்கிருந்து ஒண்டு சொல்லிட்டுது... அப்பாடா.. தப்பிட்டன்.. என்று ஆறுதல் அடைய முதல்.. பின்னுக்கிருந்தது "சேர்.... கோம் வேர்க் இருக்கு..." அப்பிடி என்டிச்சு...


எனக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேல. என்னைத் தான் முதல்ல பார்க்க போறார்.

---------------
எடு கொப்பியை..

சேர் கொப்பி கொண்டு வரல...

என்ன கொப்பி கொண்டு வரலையோ... பின்ன என்னத்துக்கு வந்தனி... etc

இல்லை சேர்...

எனக்கு ஒரு சாட்டும் வேண்டாம்.. டேய் இரண்டு தடி முறிச்சிட்டு வா...

ஒருத்தன் போறான். திரும்ப வரேக்க நல்ல நீளமா கையில பச்சைப் ப10வரசு. அதுக்கு முதல் ஒருநாளும் அடி வாங்கினதுமில்லை. அடி வாங்கிறதுகளை இளக்காரமாப் பாக்கிறதோட சரி.
எனக்கு அடி விழப் போகுது. எவ்வளவு கேவலம்... சரி.. விழுறது தான் விழுது... என்ன நோ நொந்தாலும் அழக் கூடாது.. இப்பிடில்லாம் நினைச்சுக் கொள்றன்.

அம்மா இப்பவும் சொல்லுவா.. உனக்குச் சின்னனிலேயே சரியான திமிர் என்டு.

இரண்டு பச்சைத் தடியையும் எடுத்துகொண்டு கையை நீட்டச் சொல்றார்... நீட்டினன்.. நோவண்டா அப்பிடி ஒரு நோ.. என்டாலும் வழமையா மற்றவை செய்யிற மாதிரி கையை பின்னுக்கு இழுக்கவும் இல்லை... அழவும் இல்லை... அந்தக் கோபமோ என்னவே இரண்டு அடியோட நிப்பாட்டுறவர் அண்டைக்கு 5..6 அடி.. பச்சைப் ப10வரசால அடி வாங்கினவங்களுக்கு தெரியும் அந்த வலி.. அப்பப்பா..

மனசுக்குள்ள கறுவிக் கொள்றன். என்னட்டத் தானே வருவாய் மாக்ஸ் பதிஞ்சு தரச் சொல்லி.. அப்ப கவனிக்கிறன் பார்...

அப்பிடி நினைக்கிறதில ஒரு சந்தோஷம். மற்றபடி
என்னால கவனிக்கத் தான் முடியுமா? பதிஞ்சு தா என்றால் பதிஞ்சு குடுக்கத்தானே வேணும்.

அந்த நேரமே யாழ்ப்பாண ரிய10சன் கலாசாரத்துக்கு ஏற்றபடி அம்மா அனுப்பி வைச்ச ரிய10சனில் படிப்பிச்ச நவமணி ரீச்சர்...,

வள்ளி வரப் போறா... அவ துள்ளி வரப் போறா என்று கடுகடுவென இருக்கிற வள்ளி ரீச்சருக்கு பாடினது... அவக்குத் தெரியாமல் தான் பாட முடியும் (தெரிஞ்சாச் சம்பல் எல்லோ)

அதுக்குப் பிறகு,
ஆறாம் ஏழாம் ஆண்டுகளில வன்னியில படிப்பிச்ச ஜெயகாந்தன் சேர் யாழ்ப்பாணம் திரும்பப் போக முதல் கடைசியா நான் போன வகுப்பில 58 மாக்ஸ் எடுத்ததுக்கு பேசினது.... (அதுக்குப் பிறகு A/Level இல் எடுத்த மாக்N)hட ஒப்பிடக்கே இது எத்தனையோ மடங்கு மேல)

வெறும் பேப்பர் சாப்பிடுவதைப் பார்த்து பெற்றோர் சந்திப்பில் வைக்கோல் வாங்கி குடுக்கச் சொன்ன தங்கேஸ் ரீச்சர்...

நல்லாப் படிக்கிறவங்கள தவிர மற்றவர்களுக்கு வில்லனாக தோன்றும் குட்டு புகழ் தங்கப்பா...

கொஞ்சம் வளர்ந்த பிறகு... கொழும்பில படிப்பிச்ச ஜெயக்குமார் மிஸ்ஸிட பேரைச் சொல்லி கண்டீனில் சாப்பாடு வாங்கிறது...

கணிதம் என்றால் பிடிக்காத எனக்கு கணிதம் படிப்பிக்க வேண்டிய நிலைமை வந்திருக்கு... எதை வெறுக்கிறமோ அது தான் எங்களுக்கு கிடைக்கும் என்று சொல்ற தனுஜா மிஸ்ஸ}க்கு தேற்றம் செய்யவே தெரியாது என்று தெரிஞ்சு வெச்சுக் கொண்டு... வேண்டுமென்றே எங்களுக்கு நல்லாத் தெரிஞ்ச தேற்றக் கணக்குகளை சந்தேகம் என்று கேட்டு அவவைக் குழப்பி பாடத்தை நடத்த விடாமல் அரட்டை அடிச்சுக் கொண்டு இருந்தது...

(இதே இதை A/L இல் Physics ரீச்சருக்கும் செய்து பார்த்தம்.. ஒரே ஒரு நாள் தான் சரி வந்திச்சு.. அதுக்குப் பிறகு.. தெரியேல.. நான் பார்த்திட்டு வந்து நாளைக்குச் சொல்றன் என்டிட்டு படிப்பிக்கத் தொடங்கிட்டா.. L)

அதிகாரம் மிகுந்தவர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் பெரும்பாலான கணித ஆசிரியர்களிற்கிடையே பண்பாக அன்பாகப் பழகும் சுந்தரலிங்கம் சேர்...

நல்லா வளர்ந்த பிறகு(அதாங்க A/Level) தனுஜா மிஸ் மாதிரியே நாங்க வெறுக்கிறது தான் எங்களுக்குக் கிடைக்கும் என்றதை பெண்களை வெறுக்கிற தனக்கு பெண்கள் பாடசாலையில் படிப்பிக்கக் கிடைத்ததோட பிறந்த பிள்ளைகள் மூன்றும பெண் பிள்ளைகளாவே பிறந்து உணர்த்திட்டுது என்று சொல்லும் பிரேம்நாத் சேர்..

இப்படியாக என் கணித ஆசிரியர்களும் அவர்கள் சம்பந்தப்பட்ட சில சம்பவங்களும் அவ்வப்போது நினைவில வந்திட்டுப் போகுது.

அவர்கள் மேல் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நிறைய அப்பிடியே மனசில பதிஞ்ச போயிருக்கு. என்றாலும் கணிதத்தையும் வெறுக்கேல... கணிதம் படிப்பிச்சவங்களையும் வெறுக்கேல..