Thursday, November 10, 2005

தடை செய்யப்பட்ட கவிதையிலிருந்து.....

சாதாரணமாக நூலகத்திற்குச் செல்லும் போது இந்திய எழுத்தாளரது புத்தகம் ஒன்று எடுத்தால் ஈழத்து எழுத்தாளர்/வளர்ந்து வரும் எழுத்தாளாரின் புத்தகம் ஒன்று எடுக்க வேண்டுமென நினைத்திருப்பேன். என்றாலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவ்வாறு முடிவதில்லை. வாசிக்க வேண்டுமென முதலே நினைத்த புத்தகம் கண்ணில் பட்டால் பிரித்துக் கூட பார்க்காமல் எடுத்து வந்து விடுவேன். அவ்வாறு இல்லாமல ஒரு ஈழத்து புத்தகம் எடுத்த பின்னரும் இன்னொரு புத்தகம் எடுக்கும்படி தூண்டியது இந்தப் புத்தகத்தின் தலைப்பு. (அவ்வாறு தூண்டுவதற்காகவே மு.மேத்தாவினால் மப்ரூக்கிற்கு அந்தத் தலைப்பையே புத்தகத்தின் தலைப்பாக வைக்கும்படி கூறப்பட்டிருந்ததாம்.)
புத்தகம் பெரிதாக என்னைக் கவரவில்லை என்றாலும் ஒரு சில கவிதைகள் பிடித்துப்போயின. அதில் ஒன்று.
பிரிவு

என்றாயினும் ஒரு நாள்
நாம் பிரிய வேண்டியவர்களே..
நாளை அன்றி
நாளைகளுக்கு நாளையாயினும்...

உறவினரால் மரணத்தால்
மாறாய்
நம்மால் கூட
அந்தப்பிரிவு நிகழலாம்
ஒளியை நிலவு இழப்பது மாதிரி
உன்னை நானோ..என்னை நீயோ...
என்றாயினும் ஒருநாள் அது நிகழ்ந்து போகலாம்.

சில அஞ்சல்களாலும்
அழுவதனாலும்
ஸ்பரித்த ஞாபகங்களை
மீள ஸ்பரித்துப் பார்ப்பதனாலும்
வெற்றுப் பிரார்த்தனைகளாலும்
நிகழாமலிருக்கப் போவதில்லை அது

என்றாயினும் அது நிகழும்..
நாளை அன்றி நாளைக்கு நாளையாயினும்
கண்ணீர் உகுப்பாயா அவ்வேளை?
அன்றி
முன்பெல்லாம் உன்மேல் பூத்தூவிய
அதே தேவதைகளை
சாமிட்டுத் தொலைப்பாயா?

மெல்லிய தென்றலுக்கே உதிர்ந்து போகும்
அதி மெல்லியதொரு பூவின் இதழுதிர்வாய்
இந்தப் பிரபஞ்சத்தின்
தவிர்க்க முடியாத சில சலனங்களில்
நம் பிரிவு அது நிகழ்ந்தே தீரும்
உறவினரால் மரணத்தால்
மாறாய்
நம்மால் கூட
அந்தப் பிரிவு நிகழலாம்
விரும்பி சிலவேளை
நாம் விரும்பாமல் கூட

அழுகை புலம்பல் சாபம்
இவைகளின் திரை நீக்கி
திறந்து பார்க்கின்..
வந்தே தீருமென்றானதொன்றை
வரவேற்று...............
....................................................
பிரிவும் ஓர் அனுபவமாய்
அறிந்து கொள்ளுமோ மனம்?

அப்போ
நேசங்கள் ஞாபகித்து
ஞாபகங்களை நேசிக்க
உறவும் பிரிவும் காதலிலே
ஒன்றென்றறிவாய் நீ

-மப்ரூக்-

4 comments:

said...

கவிதை நல்லாருக்கு. ஆனா ஏன் தடை செய்தாங்கன்னுதான் தெரில?!

அன்புடன்,
மூர்த்தி
www.muthamilmantram.com

said...

தவறுதலாக இடப்பட்ட இரண்டு பதிவுகளிலொன்றை நீக்கும்போது இது நீக்கப்பட்டுவிட்டது. நன்றி Chameleon..

At 1:00 AM, சினேகிதி said...
//சில அஞ்சல்களாலும்
அழுவதனாலும்
ஸ்பரித்த ஞாபகங்களை
மீள ஸ்பரித்துப் பார்ப்பதனாலும்
வெற்றுப் பிரார்த்தனைகளாலும்
நிகழாமலிருக்கப் போவதில்லை அது//

this is true :)
paavai methavin "thangaiku" vasichrukringala

said...

இல்லை சினேகிதி. இதுவரை வாசிக்கக் கிடைத்ததில்லை.

//ஏன் தடை செய்தாங்கன்னுதான் தெரில?!//

தடை செய்யப்பட்ட கவிதை புத்தகத்தின் பெயர் தான் மூர்த்தி

said...

பாவை
உங்கள் பதிவுகள் எல்லாவற்றையும் படித்தேன்.
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
ஏன் தொடராமல் விட்டு விட்டீர்கள்?
இலங்கையிலிருந்து ஒரு பதிவு என்னும் போது வாசிக்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது.
தொடர்ந்தும் எழுதுங்கள்.

நட்புடன்
சந்திரவதனா