Sunday, October 30, 2005

இலங்கையர் ஒருவரை இனங்காண்பது எப்படி?

இலங்கையரை எவ்வாறு இனங்காண்பது என்ற தலைப்புடன் இலங்கையர் அல்லாதவருக்கு முன் செலுத்த வேண்டாம் என்ற வேண்டுகோளோட எனக்கு வந்த முன்செலுத்தப்பட்ட மடல் (இந்தத் சொல்லுக்காக சிகிரிக்கு நன்றி) ஒன்றிலிருந்து...

இலங்கையர்கள்:
1)சாப்பிடும்போது வெங்காயம், மிளகாய், பூண்டு உட்பட எல்லாவற்றின் சுவையையும் ரசித்து சுவைத்து உண்டு தட்டைக் காலி பண்ணிடுவார்கள்.
2)பரிசுப் பொருட்கள் வைச்சுத் தந்த பெட்டி அதைச் சுத்தி வந்த பேப்பர், அலுமினியக் கடதாசி எல்லாத்தையும் எடுத்துப் பிறகு பாவிப்பதற்காக பத்திரமாக வைப்பார்கள்.
3)பல்லில மாட்டிக் கொண்ட உணவுத் துணிக்கைகளை tshick, tshick என்று சத்தம் வர எடுப்பார்கள்.
4)விமான நிலைய வாசலில இரண்டு மிகப் பெரிய சூட்கேஸ்களோட நின்று கொண்டிருப்பார்கள்.
5)Party ஒன்றுக்கு ஒன்றிரண்டு மணித்தியாலம் பிந்திப் போவதோட அது normal என்றே நினைப்பார்கள்.
6)தவறுதலாக முத்திரை குத்தாம வாற தபால் தலைகளை கவனமாக பிய்த்து எடுத்து வைப்பார்கள்.
7)குளியலறையில கண்டிப்பாக கை கழுவுவதற்கு ஒரு பிளாஸ்ரிக் பாத்திரம் ஒன்று இருக்கும்.
8)தன் பிள்ளைகளுக்கு ஒரே உச்சரிப்போட(rhythm) கூடின மாதிரியான பெயர்களை வைப்பார்கள். (உதாரணத்துக்கு சுரேஸ், ரமேஷ், தினேஸ்)
9)பிள்ளைகளினது உண்மையான பெயர்களுக்கு சம்பந்தமில்லாமல் செல்லப் பெயர் ஒன்று வைத்துக் கூப்பிடுவார்கள்.
10) "இங்கு உணவு, நீர் அனுமதிக்கப்படாது" என்று பெயர்ப்பலகை மாட்டப்பட்ட இடங்களுக்கும் நொறுக்குத் தீனிகளை எடுத்துச் செல்வார்கள்.
11)வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் விடை பெறும்போது வாசலில் வைத்து மணித்தியாலக் கணக்காக கதைத்துக் கொண்டிருப்பார்கள்.
12)காரில் எவ்வளவு பேரை ஏற்ற முடியுமோ அவ்வளவு பேரை ஏற்றி செல்வார்.
13)புதிதாக வாங்கிய பொருட்களை (remote control, VCR, carpet or new couch.) பிளாஸ்ரிக் கவரால மூடி கவனமாக வைத்திருப்பார்கள்.
14)தன் பிள்ளைகளிடம் நண்பர்கள் சொல்வதைக் கவனத்திற் கொள்ள வேண்டாமென்று சொல்லும் பெற்றோர்கள்; மற்ற "Uncles And Aunties" என்ன நினைப்பார்களோ என்பதற்காக பிள்ளைகளைச் சில விஷயங்களைச் செய்ய விட மாட்டார்கள். ;
15) Rice cooker வைத்திருப்பது முக்கியமானது.
16)நாப்பது வயதானால் கூட தங்கள் பெற்றோருடனேயே வசிப்பார்கள். பெற்றோரும் அதையே விரும்புவார்கள்.
17)தங்கட மகளாக இல்லாட்டா யாருடைய மகள் யாருடைய மகனோட ஓடினது என்பதைத் தெரிஞ்சிருக்க விருப்பம் காட்டுவதோட அதை மற்றவர்களுக்குப் பரப்புவதைத் தம் கடமையாக நினைப்பார்கள்.
18)தொலைதூர அழைப்புகளை இரவு 9 மணிக்கப் பிறகே (Off-peak hours)
எடுப்பார்கள்.
19)பெற்றோருடன் வீட்டில் இல்லாமல் வேறு இடத்தில் வசித்தால், பெற்றோர் தொலைபேசியில் கதைக்கும் போது அது நடுச்சாமமாக இருந்தாலும் சாப்பிட்டாயிற்றா எனக் கேட்க மறக்க மாட்டார்கள்.
20)இலங்கையர் ஒருத்தரை சந்தித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தால் எந்த ஒரு வகையிலோ அவர்கள் தம் உறவினர் என கண்டுபிடித்து விடுவார்கள்.
21)வெளிநாட்டில் உள்ளவர்களோடு தொலைபேசியில் பேசும் பெற்றோர்கள் அவர்களுக்கு கேட்பதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு கத்திக் கதைப்பார்கள்.
22)சோபாவில் அழுக்குப்படாமல் இருப்பதற்கு பெட்சீற்ஸ் போட்டு வைத்திருப்பார்கள்.. அதே நேரம் அவர்களது பெட்ல இருக்கிற சீட்ல (sheet) தண்ணீர் பட்டு மாதக்கணக்காக இருக்கும்.
23)திருமண வைபவத்தில் 600 பேருக்குக் குறைவாக வந்திருந்தால் சங்கடமாக உணர்வார்கள்.
24)திருமணப் பேச்சின் போது தங்கள் பெண் உண்மையாக எப்படி இருந்தாலும் மெல்லிய அழகான பெண் என்றே சொல்லுவார்கள்
25)எப்பொழுதுமே மற்றவர்களுடைய சொந்த விஷயங்களில் மூக்கை நுழைப்பதற்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் எங்கே போகிறார்கள் என்பதை அறிவதற்கு விருப்பம் காட்டுவார்கள்.
இதை வாசிக்கும் உங்களுக்கு இதில் பல பொருந்துகிறதா? அப்படியானால் நீங்கள் ஒரு இலங்கையர் ( + தமிழரென்று சொல்லலாமெனவே நான் நினைக்கிறேன்) என்பதில் சந்தேகமே இல்லை.

Wednesday, October 19, 2005

புத்த பிக்குவோடு ஒருநாள்........

யாழ்ப்பாணத்தில் நான் இருக்கும் மட்டும் புத்த பிக்குககள் எவரையும் நேரில் கண்டதில்லை. ஐந்து வயதிலிருந்து கொழும்பு வரும் வரை யாழ்ப்பாணத்தில் மின்சார வசதி இல்லாததால் தொலைக்காட்சியிலும் பார்த்ததில்லை. புத்தகங்கள் மூலமாக சித்தார்த்தர் புத்தராக மாறியதைத் தவிர வேறு எதுவும் புத்த மதத்தைப் பற்றியோ பிக்குகளைப் பற்றியோ அறிந்திருக்கவில்லை.

பத்திரிகைகளிலிருந்தும் நான் வளர்ந்த சூழலிலிருந்தும் புத்த பிக்குகள் எல்லோரும் தமிழருக்கு எதிரானவர்கள், மதம் மேல் தீவிர பற்றுள்ளவர்களாகக் காட்டிக் கொள்ளும் இனவெறியர்கள்.. அவ்வளவு தான்.

அப்பவெல்லாம் நாங்கள் சின்னப்பிள்ளைகள் சேர்ந்து
“புத்தம் சரணம் கச்சாமி
புத்தற்ற ----------- கிச்சாமி
-------------------------------------------
-------------------------------------------” என்று புத்தம் சரணம் கச்சாமியின் வரிகளை மாற்றி கேலியாகப் பாடுவோம்..

பின்னர் புத்த மதத்தைப் பற்றிய எனது கருத்துகள் மாறினாலும் எனக்குள் வேறூன்றிப் போயிருந்த வெறுப்பின் காரணமாக இப்போதும் புத்த பிக்குகள் மதிக்கப்படவேண்டியவர்கள் என்று என்னால் கருதவே முடியவில்லை. உண்மையாக புத்த மதம் கூறுவது போன்று அதனைப் பின்பற்றி நெறிப்படி வாழும் பிக்குகள் இருந்தாலும், வறுமையின் நிமித்தம் பிக்குகளாக மாற்றப்படும் சிறுவர்கள், கேவலமான அரசியல்வாதிகளுக்குத் தாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்களில்லை என்ற மாதிரியாக செயற்படும் “ஹெல உறுமய” பிக்குகள் போன்றோர், அஹிம்சையை வலியுறுத்திய புத்தபகவானின் பெயரைக் கூறி ஆர்ப்பாட்டம், அடிதடிகளில் ஈடுபடும் பிக்குகள், போன்றோரை பற்றி அடிக்கடி அறிவதாலும் பார்ப்பதாலுமோ என்னவோ அந்த எண்ணம் இன்னும் வலுப்பெறுகிறது.

கொழும்புப் பேரூந்துகளில் முதல் இருக்கை மதகுருமார்களுக்காக ஒதுக்கப்பட்டிருப்பது வழமை.. போக்குவரத்துக்காக 98% பேரூந்துகளைத் தான் பயன்னடுத்துகிறேன், என்றாலும் அந்த இருக்கையில் பிக்குகளைத் தவிர வேறு மதகுருமார்கள் அமர்ந்து நான் பார்த்ததில்லை.(மற்றைய மதகுருமார்கள் பஸ்ஸில் பயணம் செய்வதில்லையோ?)

இப்பிடித்தான் ஒருக்கா நான் பள்ளிக்கூடத்துக்குப் பஸ்ஸில போய்க் கொண்டிருந்தேன். எல்லா இருக்கைகளும் நிரம்பியிருந்தாலும் பெரிசாக் கூட்டமில்லை. ஓரிருவர் தான் நின்று கொண்டிருந்தார்கள். அடுத்த தரிப்பில் பஸ் நிற்க பிக்கு ஒருவர் ஏறினார். “மதகுருமார்களுக்கு” என்று ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் இருந்த இரு ஆண்களில் ஒருவர் எழும்பி நின்று கொள்ள பிக்கு அமர்ந்தார்.
இரண்டு தரிப்புகளுக்குப் பிறகு பிக்கவுக்குப் பக்கத்திலிருந்த மற்றையவர் இறங்கிச் சென்றார். பிக்கவுக்குப் பக்கத்து இருக்கை காலியாக இருந்தது. அந்த இருக்கைக்கு பக்கத்தில் தான் நான் நின்று கொண்டிருந்தேன். கூட்டமில்லாத பஸ்ஸில் நின்று போவதையே விரும்பும் நான் யாராவது இருக்கட்டும் என்று பேசாமல் நின்றேன். யாரும் இருக்கவில்லை. காலியாக இருக்கை உள்ள போது இருக்காமல் நிற்பது சரியில்லையே.. கனத்த புத்தகப்பை வேற இருக்கச் சொல்லியது.. இருக்கவா? என்று யோசிச்சேன். பிக்குவுக்குப் பக்கத்தில இருக்கலாமோ என்று தெரியவில்லை. முதல்ல ஒருத்தர் இருந்திட்டுத் தானே எழும்பிப் போனாரெண்டு நினைச்சுப் போட்டு போய் இருந்திட்டன். பிக்கு ஒருமுறை என்னைப் பார்த்திட்டு பேசாம தன்ர பாட்டில இருந்தார். பஸ்ஸில ஒரே சலசலப்பு. எனக்கு பின்னாலிருந்த சிங்களப் பெண்மணி என்னவோ சிங்களத்தில் சொன்னார். கூர்ந்து கவனிக்காட்டா எனக்குச் சிங்களம் கொஞ்சமும் புரியாது.. வேற யாரோடையோ கதைக்கிறாவாக்கும் என்று நினைச்சிட்டுப் பேசாமல் இருந்திட்டன். அவ விடலே.. திரும்ப என்னைத் தட்டி “துவ.. அதில இருக்கக் கூடாது, எழுந்திரும்” என்று சொன்னா..

செய்யக்கூடாததை செய்திட்டேனே என்று எனக்கு என்னவோ போல ஆச்சு. டக்கெண்டு எழும்பிட்டன். முதல் இருக்கை என்றதால பஸ்ஸில் இருந்த எல்லோருமே இருந்ததையும அவ சொன்னதையும் நான் எழும்பினதையும் பார்க்கலாம். நான் தான் அவமானப்பட்டிட்டன் பரவாயில்லை என்று விட்டாலும் பாடசாலை உடையோட நின்றதால என் பாடசாலையையும் ..........................

அதற்குப் பிறகு நண்பர்கள் சொன்னார்கள், பிக்குவுக்குப் பக்கத்தில பெண்கள் யாரும் இருக்கக் கூடாதாம்.. ஆண்கள் வேணுமென்றால் இருக்கலாமாம் என்று. எனக்கெண்டா இது ஏனென்று புரியவேயில்லை. பெண்கள் பக்கத்தில் இருந்தால் அவர்கள் பிக்குகளாக இருப்பதன் புனிதம் கெட்டுப் போய் விடுமோ?

அந்த சமயத்தில், இந்தியாவில் பஸ்ஸில் ஆண்களுக்கு வேறாகவும் பெண்களுக்கு வேறாகவும் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அது தெரியாமல் நடந்து கொண்ட இலங்கையர் ஒருவர் வயது முதிர்ந்த பெண்மணி ஒருவரிடம் ஏச்சு வாங்கியதாகவும் அதை பார்த்த நண்பர் ஒருவர் சொன்னது ஞாபகத்துக்கு வந்து போனது.

Wednesday, October 05, 2005

பிடித்ததில் ஒன்று

என் காதலால் உனக்கு எவ்விதத் தொல்லையும்
உண்டாகாத வண்ணம் உன்னை நான் அப்படிக்
காதலிப்பேன்; இணை பிரியாது
எந்நேரமும் உன்னுடன் ஒட்டிக்கொண்டு
ஓர் இதயம் இயங்குகிறது
என்பதைத் தவிர……

நன்றியுணர்வுடைய நேசமும்
பாசமும் கொண்ட ஓர் இதயம்
என்றும் உனக்கே உரியதாயிருந்து….

உனக்காக எதுவும் செய்யத் தயாராயுள்ள
ஓர் இதயம் உன்னுடன் இணைந்து
இயங்குகிறது என்பதைத் தவிர..

வேறு எதுவும் உனக்கு தெரியாதபடி…
அப்படி உன்னைக்
காதலிப்பேன்.


-மயோதர் தாஸ்தவேய்ஸ்கி-
(வெண்ணிற இரவுகள்)