Wednesday, November 09, 2005

நான் வாக்குப் போடப் போறேன்.

முதல் முதலாக நான் வாக்குப் போடப் போறேன். வீட்டில கடைசிப்பிள்ளையாகப் பிறந்ததாலையோ என்னவோ என்னை எல்லோரும் சின்னப்பிள்ளையாகவே நடத்திறதைக் கண்டு கவலைப்பட்டுக் கொண்டிருந்த எனக்கு ஆறுதல் அளிக்கிற மாதிரி வாக்குச் சீட்டு வந்து சேர்ந்து இருக்குது. ரொம்ப சந்தோஷம். இருக்காதா பின்னே.. நாட்டின் ஜனாதிபதியையே தேர்ந்து எடுக்கிற உரிமை எனக்கு இருக்குது எண்டால் வேற எதுக்குத் தான் இல்லை? :-)

மூன்று வருடங்களுக்கும் மேலாக வீட்டுக்காரர் விண்ணப்பம் அனுப்பியிருந்தாலும் கடந்த தேர்தல்களில் வாக்களிப்பதற்காக அவர்களுக்கு வாக்குச் சீட்டு வரவேயில்லை. இந்த முறை என் பேர் இருக்கிற ராசியோ என்னவோ எல்லோருக்கும் வந்திட்டுது. :-) (பெரும்பான்மையான தமிழ்மக்களுக்கு மட்டும் திட்டமிட்டு வாக்குச்சீட்டினை அனுப்பாமல் இருந்ததாகவும் மகேஸ்வரன் எம்.பி மற்றும் கொழும்பு மாவட்டத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் முயற்சியின் விளைவாகவே இந்த முறை அனுப்பப்பட்டதாகவும் அறிகிறேன்)

எங்களுக்கு வாக்குச் சீட்டு வருகிறதோ இல்லையோ வாக்குப் போடச் சொல்லி தொலைபேசி மூலம் விடுக்கப்படுகிற வேண்டுகோள்களுக்குக் குறைவிருப்பதில்லை. இந்த முறை மட்டும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு போடச் சொல்லி நான்கு தரம் தொலைபேசியினூடு கேட்டிருந்தார்கள். வாக்குச்சீட்டு வர முதல் தான் அவர்கள் அழைப்பு எடுத்திருந்தார்கள். நானும் வெகு கூலாக "உங்களுக்கு போடுறது பிரச்சினையில்லை. எங்களுக்கு வாக்குச்சீட்டு வராதென்றே நினைக்கிறேன். ஏனென்றால் கடைசி இரண்டு தேர்தல்களுக்கும் நடந்த மாதிரித் தான் நடக்கும். அதால எங்களுக்க வாக்குச் சீட்டு வந்தால் தான் யோசிக்கலாம்" என்றேன். அவர்கள் வெகு சிரத்தையோட வாக்குச் சீட்டு வராட்டா எப்பிடி பெற்றுக்கொள்றதென்று விபரமாக சொன்னார்கள். என்ன ஒரு சிரத்தை???

வாககுச் சீட்டு வந்தால் என்ன... விட்டால் என்ன.. என்ற நிலையில் தான் பெருமளவான தமிழ் மக்கள் தேர்தலில் அக்கறையில்லாமல் இருக்கிறார்கள். நானெல்லோ முதல் முறையென்றதால துள்ளுறன். :-)

எனக்கு வாக்குச் சீட்டு அனுப்பிட்டாங்க... வாக்குப் போடப் போறேன்.. என்று சந்தோஷப்படுகிறேனே யாருக்குப் போடப் போகிறேன்??????

வரப்போற இரண்டு கழுதைகளில எந்தக் கழுதை நல்ல கழுதை (மன்னிச்சுக்கோங்க நிஜக் கழுதைகளே.. நீங்கள் ரொம்ப நல்லவங்க..) என்று பார்த்துப் போடுறதா?

இல்லை வாறது இரண்டுமே கழுதை தானே எந்தக் கழுதை வந்தா எனக்கென்ன என்று தேர்தலைப் பகிஷ்கரிக்கிறதா? (யாழப்பாணத்தவருக்கு தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி கூறப்பட்டுள்ளதாம். புலிகள் இல்லை.)

இரண்டு கழுதைகளையும் விட மிச்சம் இருக்கிறவர்களில் யாருக்காவது போடுறதா? (சித்தாலேப வைத்தியர் விக்டர் ஹெட்டிகொடவைத் தவிர வேற யாரையும் எனக்குத் தெரியாது)

இதை விட வேற option எனக்கு இல்லை.

இரண்டு கழுதைகளில எந்தக் கழுதையும் எதுவும் செய்யப்போறதில்லை. இப்ப இருக்கிற மாதிரித்தான் (சண்டையும் இல்லை.. சமாதானமும் இல்லை) நிலைமை தொடரப் போகுது. ஆக இந்த இரண்டில ஒண்டுக்குப் போடுறதால எதுவும் ஆகப்போறதில்லை.

முதல் முதலா வோட்டு வந்திருக்கு. அதால எனக்கு பகிஷ்கரிக்கவும் விருப்பம் இல்லை. பகிஷ்கரிக்கிற ஆக்கள் கள்ளவோட்டுப் போடுவதற்கு உதவி செய்கிறார்கள். பின்னே போடாத வோட்டுக்களை விட்டு வைப்பாங்களா? கட்டாயம் அது யாருக்கோ போடப்படத் தான் போகுது.
அதோட Mercantile holiday இல்லை என்று சொல்லி எனக்குத் தீபாவளிக்குக் கூட விடுமுறை தராதவங்க தேர்தல் தலைமைச்செயலகம் அமைந்துள்ள ராஜகிரிய வீதியினூடாக செல்ல வேண்டியிருப்பதால் சனி... ஞாயிறு உட்பட தொடர்ந்து நான்கு நாட்களுக்கு (ஆமா அப்பிடித்தான் Notice board இல் போட்டிருக்கு) விடுமுறை விட்டிருகிறார்கள். அதால நான் வோட்டுப் போடத் தான் போறேன்.

குறைஞ்சது மக்களுக்காக சித்தாலேபயைத் தந்தவருக்கு(மற்றவர்கள் எதுவுமே செய்யேலையே) போடலாம் என்றால் அதால என்ன பயன்? பாராளுமன்றத் தேர்தலென்றாலும் பரவாயில்லை.. வாக்குகளைச் சிதறடிக்கிறன் பேர்வழி என்று கிளம்பலாம்.
என்றாலும் சித்தாலேப வைத்தியர் நாட்டுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் நிறையச் செய்யப்போகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அப்பிடிப் பார்த்தால் யார் தான் சொல்லல...

Only words, no deeds. . இது தானே எங்க அரசியல்வாதிகள்.

ஆக முதல் முதலா எனக்கு வந்த வோட்டை என்ன செய்றதென்று எனக்குப் புரியவேயில்லை. ஒரு கிழமைக்குள் எடுப்போம் ஒரு முடிவு. (ஆமா.. பெரிய முடிவு.. )

பி.கு: இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பதென்று தீர்மானத்தை தமிழ் மக்கள் தாங்களே சுயமாக சிந்தித்து எடுக்குப்படி புலிகள் கூறியிருக்கிறார்கள்.

3 comments:

said...

சித்தாலேப வைத்தியரை விடவும் நல்ல முற்போக்காளர்கள் பலர் கேட்கிறார்கள். வைத்தியர் கேட்பது, அவரது பின்னணி நேர்மையானதல்ல.

நான் செய்யப்போவதை உங்களுக்கு சொல்கிறேன்,
வாக்கு ச்சாவடிக்கு சென்று, வாக்குச்சீட்டில் "நான் சிறீ லங்காவின் அரசியல் யாப்பை நிராகரிக்கிறேன்" என மூன்று மொழியிலும் கொட்டை எழுத்தில் எழுதிவிட்டு வரப்போகிறேன். இதுதான் பகிஷ்கரிப்பு.
வாக்குப்போடாமல் இருப்பதல்ல. அது கள்ளவாக்குக்கே வழிவகுக்கும்.

said...

நன்றி மு.மயூரன்


எனது அம்மா கூட இந்த மாதிரித் தான் (நீங்கள் குறிப்பிட்டதை அல்ல) எழுதிவிட்ட வரப்போவதாக சொன்னா.
நான் சித்தாலேப வைத்தியருக்கு போடப் போவதாக சொல்லவில்லை. எனக்கு அவரை விட்டால் வேறு யாரையும் தெரியாது. சமீப காலமாக பத்திரிகைகளில் வரும் பேட்டிகள் மூலமாக மற்றவர்களில் சிலரைப் பற்றி கொஞ்சம் கொஞ்சம் அறிந்தேன். அவை என்னைக் கவரவும் இல்லை.

//"நான் சிறீ லங்காவின் அரசியல் யாப்பை நிராகரிக்கிறேன்" என மூன்று மொழியிலும் கொட்டை எழுத்தில் எழுதிவிட்டு வரப்போகிறேன். //

என்னால் மூன்றாவது மொழியில் எழுத முடியாதே. :-(

said...

வாக்குப்போடாமல் இருப்பதல்ல. அது கள்ளவாக்குக்கே வழிவகுக்கும்

:-(