Sunday, December 17, 2006

கேட்டாரே ஒரு கேள்வி...

சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒரு சிங்களப் பெண்ணின் வேண்டுகோள் ஒன்றைப் பார்க்கக் கிடைத்தது.. விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்ட படைவீரரான தன் கணவனின் விடுதலையை வேண்டி நின்றார் அந்தப் பெண்மணி... தன் கணவரை விடுவிக்க விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துமாறு அந்தப் பெண் கண்ணீருடன் அரசாங்கத்தைக் கோரினார்...

அவர்களது திருமணப் புகைப்படம், அவர் இல்லாமல் தாய் தந்தையரின் கஷ்டம், தனது கஷ்டங்களை மனம் உருகும்படி சொன்னார்...(எனக்கென்றால் இது மாதிரியானதுகளைப் பார்க்கும் போது கொஞ்சம் கூட அனுதாபம் வருகிறதே இல்லை... மனிதாபிமானம் கொஞ்சம் கூட எனக்கு இல்லையோ என்ற சந்தேகம் பலமாக இருக்குது எனக்குள்..)


வகை தொகையில்லாமல் தமிழர்கள் கைது செய்யப்படும் போது தமிழர்களின் உணர்வு இப்படித்தானே இருக்கும்... யாராவது எங்கள் கோரிக்கைகளுக்கு செவிமடுக்கிறார்களா?
விடுதலைப்புலிகளால் கைது செய்யப்படுவோர் விருந்தாளிகள் மாதிரி தான் நடத்தப்படுகிறார்கள்... சொல்லப் போனால் இராணுவ முகாமில் இருப்பதை விட வசதிகள் அந்தப் படைவீரருக்கு அங்கே அதிகமாகவே இருக்கும். விடுதலையான பல இராணுவத்தினரே தங்களை விடுதலைப் புலிகள் கவனிக்கும் விதம் பற்றி சிலாகித்து சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இலங்கை அரசாங்கம் கைது செய்யப்படும் தமிழர்களுக்கு செய்யும் சித்திரவதை கொஞ்ச நஞ்சமா?.. உயிர் வாழவே வெறுக்கிற அளவுக்கு அவர்கள் சித்திரவதைகளை அனுபவிக்கிறார்கள்.

இப்படி எல்லாம் எனக்குள் எண்ணிக் கொண்டிருக்கும் போது அந்தப் பெண்மணி கேட்டார்...."பாதுகாப்புச் செயலரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாஜ ராஜபக்ஸ மயிரிழையில் உயிர் தப்பியதற்கு அவர்கள் எந்தளவு சந்தோஷப்பட்டார்கள் என்பதை தொலைக்காட்சியில் காட்டினார்கள்.... என் கணவர் விடுதலையானால் நானும் என் குடும்பமும் சந்தோஷப்படுவோமே..." என்று... தங்கள் உணர்வுகளை புரிந்து கொள்கிறார்கள் இல்லையே என்ற ஆதங்கத்துடன் அந்தப் பெண்மணி இப்படிக் கேட்டார்,..

அவர் கேட்பது நியாயம் தானே...

அவரவர்க்கு அவரவர் குடும்பம் பெரிது... மற்றவர்களைப் பற்றிய கவலை இல்லை... என்று எடுத்துக் கொண்டாலும்.... ஒரு ஜனாதிபதி என்ற முறையில் தன் நாட்டு மக்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய கடப்பாடு மகிந்தவிற்கு இருக்கிறதே...

1 comments:

said...

\\எனக்கென்றால் இது மாதிரியானதுகளைப் பார்க்கும் போது கொஞ்சம் கூட அனுதாபம் வருகிறதே இல்லை... மனிதாபிமானம் கொஞ்சம் கூட எனக்கு இல்லையோ என்ற சந்தேகம் பலமாக இருக்குது எனக்குள்\\

எனக்கும் இந்தச் சந்தேகமிருக்கு:-)