Tuesday, September 08, 2009

கதை சொல்லப் போறன்.. இது என் கதை - தொடர்

நான் ஒரு கதை சொல்ல வேண்டிய கட்டாயத்தில இருக்கிறன்... அதானால Exam, Project, Exhibition, etc etc க்கான தயார்படுத்தல்கள் எல்லாத்தையும் தூக்கி ஓரமாக வைத்து விட்டு இண்டைக்கு எப்பிடியும் கதை சொல்றது என்று முடிவெடுத்திட்டன்..

நான் பதிவெழுத வந்த கதையைச் சொல்ல வேணும் என்று கிருத்திகனும் விமலாதித்தனும் கூப்பிட்டிருக்கிறார்கள்.. நானும் கெதியா எழுதிறன் எண்டு இரண்டு பேருக்கும் சொன்னாலும் இன்னும் ஒரு கிழமைக்கு பிறகு எழுதிறதாகத் தான் யோசிச்சு வைச்சிருந்தன்..

கதைக்குள் கதை

ஏன் நான் இண்டைக்கு எப்பிடியெண்டாலும் இந்தக் கதையை சொல்றது என்று முடிவெடுத்தன் எண்ட கதையை முதலில சொல்லிப் போட்டு அங்கால போறன்..
வந்தியத்தேவன் கீத் இன் பதிவில் "கீத் எங்கள் கல்லூரிக்கே உரிய நேரம் தவறாமை போல் நீயும் உடனே என் விளையாட்டை விளையாடிவிட்டார் நன்றிகள்." என்று பின்னூட்டியிருக்கிறார்..
அதென்ன அவையின்ட கல்லூரிக்கே(என் சகோதர பாடசாலை) உரிய நேரம் தவறாமை? அப்ப நாங்கள் எல்லாம் என்ன நேரம் தவறுற ஆட்களோ? தவறித் தான் போடுறன் என்டாலும் கூட எப்பிடி இப்பிடிச் சொல்லலாம்... :)

அடுத்தது கிருத்திகன், விமலாதித்தன் என்று இரண்டு பேர் கூப்பிட்ட பிறகும் இன்னும் பின்னுக்கு நிக்கிறது அவ்வளவா சரியில்லைத் தானே...

அதோட சுபானு தன் பதிவில் நான் விருப்பி வாசித்த முதல் வலைப்பூ அந்த SKETCH என்று குறிப்பிட்டிருப்பது (இது தான் உடனடிக் காரணம்) அப்பிடியே உச்சி குளிர வைச்சு இந்த 1008 வேலைக்கிடையிலயும் facebook இல் farm ville இல் farm செய்யிற நேரத்தை மிச்சம் பிடிச்சு எப்பிடியாவது எழுதிப் போடு என்று எழுத வைச்சிட்டுது..

இனி கதை

எனக்கு எப்போதுமே எழுதுவதை விட வாசிப்பதில் தான் விருப்பம் அதிகமாக இருந்தது.. இருக்கிறது.. 2004 களில் எனக்காக ஒரு தளம் வைத்திருக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.. அந்த நேரம் geocities இன் பாவனை தான் இருந்தது.. அதில் எதை உள்ளடக்குவது என்பதில் குழப்பமாக இருந்தது.. A/L படிக்கிற காலமென்பதால் வீட்டில் இணையத்தில் அதிக நேரம் இருந்தால் அம்மா புறுபுறுக்கத் தொடங்கிடுவா.. அதை விட dial-up connection வேற..

அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருந்த நேரம் யாழ் வழங்கிய குடிலில் எழுதுவதாக நண்பியொருத்தி தன் இணைப்பைத் தந்திருந்தாள்.. ஆனால் அவள் பெரிதாக எழுதியிருக்கவில்லை... அவள் மூலமாகவே அறிமுகமானதே இந்த வலைப்பதிவுலகம்.. பின்னர் சயந்தனின் வலைப்பதிவுலக வருகையின் பின் விட்டு விலகாமல் இருக்க முடிந்தது.. அவ்வளவாக திரட்டி பாவிக்காமல் (அப்ப இருந்த ஒரே ஒரு திரட்டி தமிழ்மணம்) வசந்தன், சயந்தன், ஈழநாதன். டி.சே, மு.மயூரன் போன்றவர்களின் வலைகளுக்கு நானாகவே போய் வந்தேன்.. இப்போது போல் இல்லாமல் அவர்கள் அடிக்கடி எழுதவும் செய்தார்கள்.. நட்சத்திரக் கிழமையொன்றில் வசந்தன் 27 பதிவுகள் எழுதியதாக ஞாபகம்.. சில இந்தியப் பதிவர்களை மறந்து விட்டேன்.. ஒன்றரை வருடங்களுக்கு மேல் அரிதான பின்னூட்டங்களுடன் வெறும் வாசகியாக மட்டுமே இருந்தேன்..

2005 இன் பின்னர் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை விட எப்படி வலைபதிவை ஆரம்பிப்பது, தொடர்வது என்பது குறித்த தொழினுட்ப அறிவு தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே SKETCH இனை ஆரம்பித்தேன்.. எவ்வளவோ யோசிச்சும் பிடிச்ச தமிழ்ப் பெயர் கிடைக்காமல் SKETCH என்று சூட்டிக் கொண்டேன்.. முதல் பதிவு போட்டு விட்டு மேலும் என்ன எழுதுவது என்று தெரியாமல் "இலங்கையர் ஒருவரை இனங் காண்பது எப்படி" என்று எனக்கு ஆங்கிலத்தில் வந்த mail ஐ பதிவு போட வேண்டுமென்பதற்காகவே சும்மா தமிழ்படுத்தினேன்.. என்னுடைய பதிவுகளில் அது தான் மிகமும் பிரபலமானது.. நிறைய காலமாக எங்கெங்கோ எல்லாம் சுத்தி பல நண்பர்களூடாக எனக்கே மீள வரும் போது ஒரு சின்ன சந்தோஷம் எட்டிப் பார்க்கும்.. என்ன ஒன்று.. அதன் மொழி வடிவம் மட்டும் தான் என்னுடையது.. :( உள்ளடக்கம் என்னுடையதல்ல..

என்ன தான் நேரமில்லை.. அதனால் எழுதுவதில்லை என்ற பொய்யையும் சின்னப்புள்ளைத் தனமாக எழுதுகிறேன்.. அதனால் எழுதுவதில்லை என்று கொஞ்சம் உண்மையை காரணமாகச் சொன்னாலும் கூட யோசித்துப் பார்த்தால் வாசிப்பதிலும் அடுத்தவர் பதிவில் நொட்டை, நொள்ளை சொல்வதிலும் தான் என் கவனம் கூடுதலாக இருக்கிறது என்று தெரிகிறது.. :) ( நான் பெரிதாகப் பின்னூட்டுவதில்லை.. ஊட்டினால் பெரும்பாலும் அது ஊட்டமாக இருப்பதில்லை)

தினக்குரலில் வலைப்பதிவு அறிமுகம் பகுதியில் SKETCH பற்றி அற்புதமாக எழுதப்பட்டிருந்தது.. எனக்கே ஒரு நிமிடம் இது என் வலைப்பதிவு பற்றித் தான் எழுதப்பட்டிருக்கிறதா என்ற திகைப்பை ஏற்படுத்தியது.. கோசலனுக்கு நன்றிகளை இங்கே குறிப்பிட்டுக் கொள்கிறேன். எழுதப்பட்டதே ஓரிரு இடுகைகளாக இருக்க அதில் "பாவையின் ஓரிரு பதிவுகள் தவிர அனைத்தும் வாசிக்கப்படவேண்டியவையே" என்று முடிக்கப்பட்டிருந்துது.. :)) :))

கணணி அறிமுகம்

வலை பதியிறதைப் பற்றி சொல்ல வந்தால் கணணி தெரிஞ்சது எப்பிடியெண்டும் சொல்ல வேணும் தானே.. முதன் முதலாக நான் கணணியை 1999 இல் யாழ்ப்பாணத்தில் எனது பாடசாலையில் தான் கண்ணால கண்டன்.. அது ஒரு குட்டி room.. கணணி கற்பிக்கிறது என்ட class teacher எண்டதால அப்ப மொனிட்டரா இருந்த நான் அவவை தேடி அடிக்கடி அங்க போக வேண்டி வாறது.. வாசலில நிண்டு கதைக்கிறதுக்கே சப்பாத்து கழட்டிப் போட்டுத் தான் போறது... இது தான் கொம்புயூட்டரா என்று ஆசையோட எட்டிப் பார்த்தால் அதில சும்மா ஏதோ பெட்டி பெட்டியா இருந்திச்சு,. பெரிசா எனக்கு பிடிக்கேல... பெட்டிக்குள்ள பெட்டி பெட்டியா(Ms office) இருக்கு என்று பார்க்கிறதோட சரி.. (A/L அக்காமார்க்கு மட்டும் தான் பாவனைக்கு அனுமதி :( )

அதே வருட இறுதியில் கொழும்புக்கு இடம்பெயர்ந்தேன்.. வந்து ஒரு மாதத்திற்குள்ளாகவே எங்கட வீட்டில computer வந்திட்டுது.. அதில படம் பார்க்கிறதும், paint இல கீறுறதுமாக தான் ஆரம்பம் இருந்திச்சே தவிர அதை வைச்சு வேற என்ன செய்யிறது என்று தெரியேல.. அந்த முதல் கிழமையே அண்ணாவுக்கு எங்கையோ கிடைச்ச தமிழ், சிங்கள எழுத்துப் பொறித்த keyboard layout இன் print-out கையில கிடைச்சது.. அதை வைச்சு தான் என் கணணியில் என் தமிழ் ஆரம்பமாயிற்று.. எந்தத் தேவையில்லாமலே தமிழில் அடிக்கப் பழகிக் கொண்டேன்.. (இன்று வரை அண்ணாவுக்கு தமிழில் type பண்ண தெரியாது)

நான் நினைக்கிறன் முதல் பாவிச்ச font 'கழகம்' ஆக இருக்க வேண்டும்.. பாமினி எழுத்தும் கழகமும் ஒரே மாதிரியாகத் தான் இருந்ததாக ஞாபகம்.. அப்பிடியே அக்காவின் result பார்க்க அவவோட கூடப் போய் இணையமும் பரீட்சையமானது.. ஏதோ காரணத்தால் அதன் பிறகு பாமினி பிடிச்சுப் போக கழகத்தை கை விட்டு விட்டேன்..

2004 இன் ஆரம்பத்தில் msn இல் நண்பனொருவனின் status இல் பெட்டி பெட்டியான தெரிவது என்னவென்று ஆராய வெளிக்கிட்டு Unicode அறிமுகமாயிற்று.. ஆரம்பத்தில் சுரதாவின் மாற்றியும் கொஞ்ச காலத்தில் பின் அறிமுகமான e-கலப்பையும் இன்று வரை கை கொடுக்கிறது..

ஒரு கேள்வி

தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுவது எரிச்சலூட்டுவது போல் ஆங்கிலச் சொற்களை தமிழில் எழுதுவது உங்களுக்கு எரிச்சலூட்டுவதில்லையா? இந்தியப் பத்திரிகைகளில் இருந்த இந்தப் பழக்கம் வலையுலகத்தில் எம்மவரிடையேயும் சகஜமாகக் காணப்படுகிறதே....

ஒரு குறிப்பு

இந்த விளையாட்டின் விதிமுறையின் படி நால்வரை அழைக்க வேண்டும்.. சினேகிதி 11 பேரை அழைத்திருப்பதால் அதில நால்வர் நானும் அழைத்ததாகக் கொள்ளவும்.. :)

41 comments:

said...

//தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுவது எரிச்சலூட்டுவது போல் ஆங்கிலச் சொற்களை தமிழில் எழுதுவது உங்களுக்கு எரிச்சலூட்டுவதில்லையா?

அருமையான கேள்வி.. எனக்கு எரிச்சலுடன் சேர்ந்து கடுப்பும் வரும்.. உண்மையைச் சொல்வதானால் நான் அப்படியான சொற் பிரயோகங்களை வாசிப்பதற்கு மிகவும் கஸ்டப்படுவதுண்டு.. அதனால் அவ்வாறான பயன்பாட்டை நான் விரும்புவதில்லை..

என்றாலும் சுஜாதாவின் ஆக்கங்களை வாசிக்கும் போது அவரின் அத்தகைய பிரயோகங்கள் மனதினைக் கவர்வதும் உண்டு.. :)

said...

//இந்த விளையாட்டின் விதிமுறையின் படி நால்வரை அழைக்க வேண்டும்.. சினேகிதி 11 பேரை அழைத்திருப்பதால் அதில நால்வர் நானும் அழைத்ததாகக் கொள்ளவும்.. :)

ஏன் இந்த நழுவல்ப் போக்கு பாவை...?

said...

அதற்கான ஒரு காரணமாக சொல்லப்படுவது ஆங்கிலத்தையும் தமிழையும் மாற்றி மாற்றி அடிப்பது கடினம் என்பது...

எனக்கென்றால் ஆங்கிலச் சொற்களை தமிழில் எழுத்துக் கூட்டி type பண்ணுவதிலும் பார்க்க மாற்றி அடிப்பது இலகு..

he.. he.. நழுவல் போக்கு இல்லை.. யாராவது இருக்கிறார்களா இன்னமும் அழைக்கப்படாமல்??

எனக்குத் தெரிந்தவர்கள் எல்லாரும் ஏலவே அழைக்கப்பட்டிருக்கிறார்களே..

said...

//அதென்ன அவையின்ட கல்லூரிக்கே(என் சகோதர பாடசாலை) உரிய நேரம் தவறாமை? அப்ப நாங்கள் எல்லாம் என்ன நேரம் தவறுற ஆட்களோ? //

இதுதான் சகோதரப் பாடசாலை குசும்பு. ஒரு முறை உங்கள் பாடசாலையில் சின்ன கணணி சம்பந்தப்பட்ட கருத்தரங்கு செய்தேன், உங்கள் மாணவிகள் செய்த அட்டகாசம் இன்னும் மறக்கவில்லை.

நல்லா எழுதியிருக்கிறீர்கள்.

//facebook இல் farm ville இல் farm செய்யிற நேரத்தை மிச்சம் பிடிச்சு எப்பிடியாவது எழுதிப் போடு என்று எழுத வைச்சிட்டுது..//

அடுத்த தடவை Farm எப்படிச் செய்கிறது என ஒரு விளக்கம் கொடுங்கள், நாங்கள் எல்லாம் Mafia Wars காரர்கள்.

//தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுவது எரிச்சலூட்டுவது போல் ஆங்கிலச் சொற்களை தமிழில் எழுதுவது உங்களுக்கு எரிச்சலூட்டுவதில்லையா? இந்தியப் பத்திரிகைகளில் இருந்த இந்தப் பழக்கம் வலையுலகத்தில் எம்மவரிடையேயும் சகஜமாகக் காணப்படுகிறதே....//

நிச்சயமாக எரிச்சலூட்டும் என் பதிவுகளி பெரும்பாலும் ஆங்கிலத்தை தவிர்த்தே வருகின்றேன். (சில விதிவிலக்குப் பதிவுகள் உண்டு). இதனை கொஞ்சம் கொஞ்சமாக அனைவரும் குறைக்கவேண்டும்

said...

கடைசியா எழுதீட்டியள் தாட்சா...
அந்த நேரம் தவறாமை பற்றின சண்டைக்கு நான் வரேல்லை... ஆனா அப்பிடிச் சொல்லி எண்டாலும் உங்களை எழுத வச்சிட்டம்தானே :)

said...

நன்றி வந்தியத்தேவன், கிருத்திகன்..

facebook games நேரத்தை தின்கிறது.. :( :( இதில அதைப் பற்றிய விளக்கம் வேறேயா.. :(

ஒரு சமயத்தில ஒரு game எண்ற policy ஐ கடைப்பிடிக்கிறன்.. அதன் படி எப்பவோ ஆரம்பித்த Mafia Wars காலம் முடிந்து போய் தான் farm க்கு வந்திருக்கிறன்..

ம்..எழுத வைச்சிட்டீங்க கிருத்திகன்.. பரீட்சையில கோட்டை விட்டாலோ மற்றதுகளில சொதப்பினாலோ நீங்கள் தான் நஷ்ட ஈடு தர வேண்டும்.. சரியா??

said...

///தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுவது எரிச்சலூட்டுவது போல் ஆங்கிலச் சொற்களை தமிழில் எழுதுவது உங்களுக்கு எரிச்சலூட்டுவதில்லையா///

நிச்சயமாக எரிச்சலாக இருக்கும்... தட்டச்சும்போதே.. ஆனால் அப்படி எழுதவேண்டிய சிக்கல் இருக்கிறது.
1. எல்லோருக்கும் (நான் உட்பட) கலைச் சொற்கள் பரிச்சயம் இல்லை. அதுவும் தொழில்நுட்பம் சம்பந்தமான பதிவுகள் போடும்போது கலைச் சொற்களை விக்சனரியில் தேடித் தேடித் தமிழ்ப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ள என் போன்றோர், (மேதாவிகளை விட்டுவிடுங்கள்) இப்படித்தான் தட்டச்ச வேண்டியிருக்கிறது.

2. ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் தட்டச்சினால் ‘பதிவில் ஆங்கிலத்தைக் கலக்கிறாய். அதைத் தமிழில் எழுது என்று சில பேர் சண்டைக்கு வருகிறார்கள். அதாவது Blue Tooth என்பதை ப்ளூ டூத் என்று எழுது என்பதாக.

3. அப்படி ப்ளூ டூத் என்று எழுதினால் அப்படி எழுதாதே Blue Tooth என்றே எழுது என்று வேறு சிலர் சண்டைக்கு வருகிறார்கள்.

அதற்காக கலைச் சொற்கள் தெரியாதவன் எல்லாம் பதிவெழுத வரக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. என்ன எங்கள் இனத்தவருக்கே உள்ள தனிக்குணமான 'நான் 2002லயே ஜீன்ஸ் போடுறன்.. நீ 2004லதான் போட்டனீ.. ஆக நான்தான் பெரியவன்' என்கிற மனநிலை இப்படியான விஷயங்களில் புதியவர்கள் கற்றுத் தேர்வதைத் தடுக்கிறது என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்.

போகக்கு முன்னம் அல்லா ரக்கா ரஹ்மான் பற்றி ஒரு கதை.. எங்கோ வாசித்தது:
‘வந்தே மாதறம்' தொகுப்பை அவர் வெளியிட்டபோது அவருக்கு வந்த இருவிதமான விமர்சனங்கள்
1. இந்துப் பாடலை மேற்கத்திய வடிவத்துக்கு மாற்றிக் கெடுத்துவிட்டார்- இந்து அமைப்புகள்

2. இந்துப் பாடலை மேற்கத்திய வடிவத்துக்கு மாற்றிப் புகழ் பெற வைத்து இஸ்லாத்துக்குத் துரோகம் செய்துவிட்டார்- இஸ்லாமியஅமைப்புகள்

இதே மனநிலையோடுதான் இந்த ஆங்கில-தமிழ் கலப்பு பற்றிய பிரச்சினையைத் 90 சதவீதம்பேர் அணுகுகிறார்கள் என்பது என்னுடைய குற்றச்சாட்டு

said...

இலங்கையில் இருந்து வலைப்பதிவு எழுதிய முதல்(?) பெண் வலைப்பதிவரின் வலையுலக வரலாற்றை அறியக்கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி...!!!


//தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுவது எரிச்சலூட்டுவது போல் ஆங்கிலச் சொற்களை தமிழில் எழுதுவது உங்களுக்கு எரிச்சலூட்டுவதில்லையா?//

சில நேரங்களில் எரிச்சலூட்டும், ஆனால் பல நேரங்களில் பொருத்தமில்லாத தமிழ்ப்படுத்திய கலைச்சொல் பாவனை வாசிப்பின் போக்கையே தடுத்துவிடும்.

said...

இலங்கையின் (வயது)மூத்த தமிழ்ப்பதிவராகிய நீங்கள் என்னுடைய அழைப்பை ஏற்று, உங்கள் பொன்னான நேரத்தை(?)வீணாக்கி, இந்தப்பதிவை எழுதியமைக்காக்க எனது உளமார்ந்த நன்றிகளை தெரிவிக்கும் அதே வேளையில்...,

//“பரீட்சையில கோட்டை விட்டாலோ மற்றதுகளில சொதப்பினாலோ நீங்கள் தான் நஷ்ட ஈடு தர வேண்டும்.. சரியா??”// என்ற வசனத்தை மட்டும் எனக்கு சொல்லாமல் கிருத்திகனுக்கு சொல்லியமைக்காகவும் நன்றிகளை தெரிவிக்கிறேன்.

said...

நன்றாக எழுதி இருக்கிறியள்!

//எழுதப்பட்டதே ஓரிரு இடுகைகளாக இருக்க அதில் "பாவையின் ஓரிரு பதிவுகள் தவிர அனைத்தும் வாசிக்கப்படவேண்டியவையே" என்று முடிக்கப்பட்டிருந்துது.//
ஹா ஹா ஹா!

//இது தான் கொம்புயூட்டரா என்று ஆசையோட எட்டிப் பார்த்தால் அதில சும்மா ஏதோ பெட்டி பெட்டியா இருந்திச்சு//
பருத்திதுறைப்பக்கம் அந்தக்காலத்தில நிறைய கொம்பியூட்டர்கள் பழுதானதாம். இப்பத்தான் ஏன் எண்டு விளங்குது.

said...

உங்கள் கேள்விக்கான பதில்:-

நான் எப்போதும் ஆங்கிலச்சொற்களை தமிழில் பயன்படுத்துவதற்கு எதிரானவன். என்றாலும் தவிர்க்கமுடியாத தொழினுட்பச்சொற்களை ஆங்கிலத்தில் பயன்படுத்துவது தவறில்லை.

அல்லது அதற்கான கலைச்சொல்லை எழுதி அடைப்புக்குறிக்குள் ஆங்கிலச்சொல்லையும் போட்டால்
பயனுள்ளதாய் இருப்பதோடு, குறித்த ஆங்கிலச்சொல்லுக்குரிய தமிழ்க் கலைச்சொல்லையும் மக்கள் அறிந்து கொள்வார்கள் என்பது என் கருத்து.

said...

கிருத்திகன் & நிமல்

ஆங்கிலச் சொற்களை பயன்படுத்த வேண்டி வரின் அது ஆங்கிலத்திலேயே பயன்படுத்துவது என் போன்றவர்களை எரிச்சல்படுத்தாது..

ஆதித்தனின் கருத்துடன் உடன்படுகிறேன்..

//அதாவது Blue Tooth என்பதை ப்ளூ டூத் என்று எழுது என்பதாக.
பேசாமல் நீலப்பல் என்று எழுதுங்க.. :)

//என்ன எங்கள் இனத்தவருக்கே உள்ள தனிக்குணமான 'நான் 2002லயே ஜீன்ஸ் போடுறன்.. நீ 2004லதான் போட்டனீ.. ஆக நான்தான் பெரியவன்' என்கிற மனநிலை

அப்பிடியே என்னையும் குத்திக் காட்டேலை தானே.. இந்தப் பதிவை திரும்ப வாசிக்க என்னை ஒரு மூத்த பதிவராக நிலை நிறுத்த ஆங்காங்கே முயற்சி செய்திருக்கிற மாதிரியும் இருக்கு,. :D

//இதே மனநிலையோடுதான் இந்த ஆங்கில-தமிழ் கலப்பு பற்றிய பிரச்சினையைத் 90 சதவீதம்பேர் அணுகுகிறார்கள் என்பது என்னுடைய குற்றச்சாட்டு

ம்.. உண்மை தான்.. அவரவர் பார்வை...

நிமல்

//இலங்கையில் இருந்து வலைப்பதிவு எழுதிய முதல்(?) பெண் வலைப்பதிவரின்

உறுதிப்படுத்துங்க நிமல்.. பெயருக்கு பின்னாலயோ முன்னாலையோ போடுவம்.. :)

பொருத்தமில்லாத தமிழ்ப்படுத்தல்கள் மட்டுமில்லை.. சாதாரண தமிழ்ச் சொற்கள் இருக்கும் போதே எனக்கு சில இடங்களில் ஆங்கிலம் கலக்க வேண்டி இருக்கிறது.. :( இந்தப் பதிவிலையே கலந்திருக்கிறன்..
அப்படியாயின் ஆங்கிலத்தின் எழுதுவது அதைத் தமிழில் எழுதுவதிலும் பார்க்க பரவாயில்லை என்று நினைக்கிறேன்.. சரி.. பிழை சொல்லேல..

ஆதித்தன்

நீங்கள் என்பது பன்மையெல்லோ.. ஆக உங்களையும் சேர்த்துத் தான் குறிக்கிறது... :)

நஷ்ட ஈடு என்ன.. ஏது.. என்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் விரைவில் விவாதித்து முடிவெடுக்கும்..
நஷ்ட ஈட்டைப் பொறுத்து கோட்டை விடுவதா சொதப்புவதா என்பதும் தீர்மானிக்கப்படும்..

எட்டிப் பார்த்ததுக்கே பழுதாகுமா? :( :(

//நான் எப்போதும் ஆங்கிலச்சொற்களை தமிழில் பயன்படுத்துவதற்கு எதிரானவன். என்றாலும் தவிர்க்கமுடியாத தொழினுட்பச்சொற்களை ஆங்கிலத்தில் பயன்படுத்துவது தவறில்லை.

அல்லது அதற்கான கலைச்சொல்லை எழுதி அடைப்புக்குறிக்குள் ஆங்கிலச்சொல்லையும் போட்டால்
பயனுள்ளதாய் இருப்பதோடு, குறித்த ஆங்கிலச்சொல்லுக்குரிய தமிழ்க் கலைச்சொல்லையும் மக்கள் அறிந்து கொள்வார்கள் என்பது என் கருத்து.


இது சரி

said...

///“பரீட்சையில கோட்டை விட்டாலோ மற்றதுகளில சொதப்பினாலோ நீங்கள் தான் நஷ்ட ஈடு தர வேண்டும்.. சரியா??” என்ற வசனத்தை மட்டும் எனக்கு சொல்லாமல் கிருத்திகனுக்கு சொல்லியமைக்காகவும் நன்றிகளை தெரிவிக்கிறேன்.///

ஆகா ஆதித்தா.. இப்பிடியெல்லாம் சந்தோஷம் கொண்டாடுவீங்களா நீங்கள்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சாயினி..
யாரையும் குத்திக் காட்டேல்லை.. அளவான தொப்பியை அவையவை எடுத்துப் போட்டுக்கொள்ளலாம்...lol

said...

அது ஒரு குட்டி room.. கணணி கற்பிக்கிறது என்ட class teacher எண்டதால அப்ப மொனிட்டரா இருந்த நான் அவவை தேடி அடிக்கடி அங்க போக வேண்டி வாறது..//

கணணி கற்பிக்கிறது உங்கடை ஆசிரியர் என்றபடியாலதான் அவா மொனிட்டரா உங்களை போட்டிருக்கிறா..

அப்புறம் சயந்தன் வந்தபடியாலதான் நானும் வந்தன் என்பதை படித்து நான் கமலைப்போல் அழுகின்றேன் :):) ஏற்கனவே ஊரோடியும் இப்படிச் சொல்லியிருக்கிறார்.

கடந்த ஐந்து வருடத்தில் கிட்டத்தட்ட 2000 நாட்களில் நீங்கள் எழுதிய பதிவுகளில் இருபது இருபத்தைந்து பதிவுகளைத் தவிர்த்து மற்ற அனைத்தும் தரமானவையே..

said...

நன்றி சாயினி.

நீண்டகாலமாக வலையில் இருக்கிறீர்கள் எனக்கு அண்மையில் twitter மூலமாகத்தான் உங்களைத்தெரியும். அதற்கு முதலும் பெயர் கண்டிருப்பேன் தொடர்பு படுத்திப்பார்க்கவில்லை. (சயந்தன் சர்ச்சையும் ஒருபுறம் ;))

ஐ ஆம் ஆல்வேய்ஸ் ட்ரையிங் டு ரைட் டமில் டெக்னிகல் டேர்ம்ஸ். வெனெவெர் ஐ ஸ்ட்ரகிள் வித் டமில் டெர்ம்ஸ், ஐ ஜஸ்ட் கோ வித் ப்ளேய்ன் இங்க்லிஷ் டேர்ம்ஸ். யுனிகோட் இஸ் தெயார் சோ இட்ஸ் ஈசி டு ஸ்விட்ச் லாங்விச்சஸ்.

மற்றது முந்தி சோமிதரன் ஒரு சாயினிட பெயரை அப்பப்ப கதைகளில சொல்லுறவர் அது நீங்க இல்லை எண்டுதான் நினைக்கிறன்.

said...

மற்றது முந்தி சோமிதரன் ஒரு சாயினிட பெயரை அப்பப்ப கதைகளில சொல்லுறவர் அது நீங்க இல்லை எண்டுதான் நினைக்கிறன்.//
:)

மயூரனுக்கு இப்பவாவது சந்தேகம் தீர்ந்ததில் சந்தோசம் :)

said...

மன்னிக்கணும் சயந்தன்..

//அப்புறம் சயந்தன் வந்தபடியாலதான் நானும் வந்தன் என்பதை படித்து நான் கமலைப்போல் அழுகின்றேன் :):)

நானெங்கே அப்பிடிச் சொன்னன்... :P இப்பிடி நீங்கள் சொல்லிடுவீங்கள் என்று எவ்வளவு கஷ்டப்பட்டு சயந்தனை விட்டிட்டு நண்பியை முதலாவதாக சொல்றன்.. :)) நீங்க வேற...

அதோட எழுத்து ஆர்வத்தில வரேல.. தொழினுட்பம் என்ன என்று பார்க்கத் தான் வந்தன் என்று சொல்லியிருக்கிறன் எல்லோ..

(எப்பாடுபட்டாவது சயந்தனின் அழுகையை நிறுத்தி அழ வைச்ச பாவத்தை நிறுத்த முயற்சிக்கிறன்.. :) )


//கடந்த ஐந்து வருடத்தில் கிட்டத்தட்ட 2000 நாட்களில் நீங்கள் எழுதிய பதிவுகளில் இருபது இருபத்தைந்து பதிவுகளைத் தவிர்த்து மற்ற அனைத்தும் தரமானவையே.

ஏன்.. பேசாமல் எண்ணியே சொல்லியிருக்கலாமே எத்தனை என்று.. :@


மு.மயூரன்

2005 களில்
"வாக்கு ச்சாவடிக்கு சென்று, வாக்குச்சீட்டில் "நான் சிறீ லங்காவின் அரசியல் யாப்பை நிராகரிக்கிறேன்" என மூன்று மொழியிலும் கொட்டை எழுத்தில் எழுதிவிட்டு வரப்போகிறேன்." என comment போட்டிருக்கிறீர்கள்..

ஆக SKETCH ஐ கண்டிருக்கிறீர்கள்..

அச்சோ.. கொல்லுது உங்க தமிழிish..

சோமிக்கு என்னைத் தெரியுமென்பதால் நானாக இருக்கலாம்.. ஆனால் என்னைப் பற்றி கதைக்க வேண்டிய தேவைகள் இருந்திருக்காதே.. :$

said...

சொல்லமறந்திட்டன்.. இங்கிலிசை :) தமிழில் எழுதுற விசயம்.. கதைகளில் கதைசொல்லியாக நான் இதை செய்கிறேன். ஏனென்டால் கதைசொல்லிக்கு அப்படித்தான் இயல்பிலேயே வருகுது. அதோட அவன் சீமா படிச்சான் என்றுதான் சொல்ல ஏலும். CIMA படித்தான் என்று எப்பிடி தமிழ் கதையில எழுதுறது. ?

said...

//என comment போட்டிருக்கிறீர்கள்..

ஆக SKETCH ஐ கண்டிருக்கிறீர்கள்.. //

ம்ம்... ஆனா இப்பிடி தொடர்புபடுத்த இல்ல. மற்றது சயந்தன் தொடர்பான குழப்பமொண்டும் எனக்கிருக்கெல்லோ ;)

சோமி அடிக்கடி கதச்சவர் எண்டில்ல, அவர் கதைக்கும் போது ஓரிருதடவை சாயினி எண்ட பெயரை கேட்டிருக்கிறன். (நித்திரையில கதைக்கக்குள்ள இல்ல, முழிப்பில. எண்டதால பயப்பட வேணாம் ;))

said...

உந்த கொம்யூட்டர் பற்றி நானும் ஒருக்கால் சொல்லவேண்டும் நாங்கள் ஏல் படிக்கும் போது எங்கடை கொழும்பு பழைய மாணவர் சங்கம் ஒரு கணணியை அன்பளிப்புச் செய்தார்கள். எங்கடை அதிபர் அதனை ஒரு நாளும் திறந்துபார்க்கவிடமாட்டார். சொல்லுவார் யாரும் ஒரு மாஸ்டர் வந்தால் உங்களுக்கு திறந்துகாட்டுகிறன் அதுவரை அமைதியாக இருங்கள் என்றார். பின்னர் பேராதனியப் பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருக்கின்ற ஒரு அண்ணா வந்து எங்களுக்கு ஏதோ சொன்னார் ஒரு இழவும் விளங்கவில்லை. நான் நினைக்கின்றேன் அப்போ டொஸ் தான் ஒப்பிரேட்டிங் சிஸ்டம் என.

2003ல் பள்ளிக்குச் சென்றபோது கிட்டத்தட்ட 5 கணணிகள் இருந்தன. பார்க்கும்போது பழைய ஞாபகம் வந்துவிட்டது. பெரும்பாலான பாடசாலைகளில் இதுதான் அன்றைய நிலை/

said...

சயந்தன்

ஆனால் CIMA பற்றி உடன ஞாபகம் வராத ஒராளுக்கு சீமாவும் ஏதோ அரிசி மா, கடலை மா மாதிரி ஒரு மா மாதிரித் தான் இருக்கும்...

//கூகுள் குரூப்பொன்றில், ப்ளொப்பி , புளொக்

இதுகளை தமி்ழ்ப்படுத்தேலா என்றால் ஆங்கிலத்திலேயே எழுதிறது என்னை மாதிரி ஆட்களுக்கு வாசிக்க இலகுவாகவும் எரிச்சல்படுத்தாததாகவும் இருக்கும்..

Spain கட்டுரையில Body Language என்று எழுதியிருக்கிறீங்க... அப்ப ஏன் மேல இருக்கிறதையும் அப்பிடியே ஆங்கிலத்தில் எழுதேலாது?..

நான் சும்மா ஒருக்கால் அப்பிடி type பண்ண முயற்சி செய்தன்.. யோசிச்சு type பண்ண கஷ்டமாக இருக்கு,.

தமிழ் ரைகர்ஸ் பிறீடம் பைற்றர்ஸ்..

எப்பிடி உங்களால இதெல்லாம் type பண்ண முடியுது.. ஸப்பா..

மு.மயூரன்

//மற்றது சயந்தன் தொடர்பான குழப்பமொண்டும் எனக்கிருக்கெல்லோ ;)

பாவம் சயந்தன்.. :)

அப்பச் சரி.. பயப்பிடேல.. :)

வந்தியத்தேவன்

ம்.. எண்ட கொழும்புப் பாடசாலையில தாராளமான கணணிகள் இருந்தன.. ஆனால் A/L மாணவர்களுக்கே அனுமதி மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.. இப்பவும் அப்பிடித் தானோ என்று தெரியேல..
கொழும்பிலயே இது தான் நிலை எண்டேக்க யாழ்ப்பாணத்தை சொல்லவும் வேணுமோ.

said...

மற்றது எல்லாரும் தயவு செய்து இனிமேல் "கணினி" எண்டு பாவியுங்க. "கணனி" என்பது எழுத்துப்பிழை.

said...

//மற்றது எல்லாரும் தயவு செய்து இனிமேல் "கணினி" எண்டு பாவியுங்க. "கணனி" என்பது எழுத்துப்பிழை.

நன்றி.. எனக்கு இந்த சந்தேகம் இருந்தது.. கணணி என்று google ல போட சரி மாதிரி காட்டிச்சு..
மினக்கெட்டு சரிபார்க்காம போட்டிட்டன்.. :(

said...

வணக்கம் வணக்கம் :) நீங்கள் அவா தானே?

நீங்கள் கதையெழுத வந்த கதை இன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கலாமே .. அப்புறம் தோட்டத்தில காய் பழமெல்லாம் நல்லா விளையுதா? ஆடு மாடு பன்றியெலெ;லாம் நலமா?

யுனிகோட் இருக்கிறதால தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி தட்டச்சலாம். பாமினியில தான் கொமா(,) போடக்கூட எழுத்துருவை மாத்தோணும்.

நான் 11 பேகை; கூப்பிட்டனான் ஆனால் எத்தின பேர் எழுதிச்சினமோ தெரியேல்ல....இன்னும் ஆக்களைக் கூப்பிடாமல் விட்டிட்டன் என்று கவலைப்படுறன். நான் சொல்லட்ட 4 பெயர்கள் உங்களுக்கு? நீங்கள் அவையைக் கூப்பிடுங்கோ கதை சொல்ல.

said...

Body Language என்று எழுதியிருக்கிறீங்க... அப்ப ஏன் மேல இருக்கிறதையும் அப்பிடியே ஆங்கிலத்தில் எழுதேலாது?.. //

அது எழுதுறதைப்பொறுத்தது..

பொடி லாங்குவேஜ்... என்றால் பொடியன்ர லாங்குவேஜ் என்று யோசிக்கமாட்டீர்களா..

said...

வணக்கம்,
ஈழப் பதிவர் சந்திப்பின் போதான அரட்டையின் போது சயந்தன் சொன்ன வரலாற்றுச் சிறப்பு மிக்க பதிவை இப்போது தான் பார்த்தேன்.
சொந்தப் பெயரில்(?) சொந்தப் படம் போட்டு (?) சீரியசான பதிவுகளை துணிவா எழுதி இருங்கீங்க, வாழ்த்துக்கள்.சிறிலங்காவின் சுதந்திர தினம் பற்றிய பதிவு நல்லா இருக்கு.

said...

//மு.மயூரன் said...
மற்றது எல்லாரும் தயவு செய்து இனிமேல் "கணினி" எண்டு பாவியுங்க. "கணனி" என்பது எழுத்துப்பிழை //

நன்றி அண்ணா இந்த பிரச்சனை எனக்கு பல நாட்களாக இருக்கின்றது.

said...

//சினேகிதி said...
வணக்கம் வணக்கம் :) நீங்கள் அவா தானே?//

சாயினி உங்களைப்போல பதிவுகளில் உண்மைப் பெயர்களை எழுதிப்பிடிபடுகிற ஆளோ? ஹிஹிஹி.

இலங்கையின் முதல் மூத்த பெண் வலைப் பதிவரான பாவையின் மேல் எங்கள் எல்லோருக்கும் ஒரு கோபம் இருக்கின்றது.

said...

இலங்கையின் முதல் மூத்த பெண் வலைப் பதிவரான பாவையின் மேல் எங்கள் எல்லோருக்கும் ஒரு கோபம் இருக்கின்றது.//

வந்தி.. ஒரு மூத்த அதுவும் முதல்பதிவரை நீங்க மற்றாட்களை கூப்பிடுகிற மாதிரி சும்மாவா கூப்பிட முடியும்.. :)

வெற்றிலை பாக்கோடு வீடு தேடிப்போய் அழைத்திருக்கவேண்டும். :):)

said...

உங்களைப் பத்தி அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி

said...

சினேகிதி

வணக்கம்.. வணக்கம்..

நான் எவா? எவவைக் கேட்கிறீங்க..

எல்லாம் நல்லாத் தான் இருந்திச்சு.. இங்க busy ஆனதில தக்காளி போட்டதை மறந்திட்டன்.. கொஞ்சம் நட்டமாப் போச்சு.. :(

நான் பதிவு போட்டிட்டன் தானே.. ஆதிரை நீங்கள் அளாப்பி ஆட்டம் ஆடிற்றீங்க என்று 4 பேர் இல்லாம இருக்கிறார்.. அவருக்கு உதவுங்கோ.. :)

சயந்தன்
//பொடி லாங்குவேஜ்... என்றால் பொடியன்ர லாங்குவேஜ் என்று யோசிக்கமாட்டீர்களா.

சளாப்பல்.. அதைத் தானே சொல்றன்.. கதையாக இருந்தாலும் அப்பிடி யோசிப்பம்.. அதால ஆங்கிலத்தில எழுதுங்கோ எண்டு.. சீமா தெரிஞ்ச நானே ஒரு கணம் அரிசி மாவோ என்று நினைச்சிட்டன்.. :) அதைத் தவிர்கத் தான் சொல்றன்..

அற்புதன்
அடைப்புக்குள் இருக்கும் கேள்விக்குறிகள் தேவையற்றவை.. :)

வந்தியத்தேவன் & சயந்தன்
முடிந்தவை.. முடிந்தவையாக இருக்கட்டும்.. :)

போதும் இந்த அடைமொழிகள்.. இதுக்கு மேல வேணாம்... அழுதிடுவன்.. :)

வெற்றிலை பாக்கா.. ஏன் சயந்தன் ஏன்? நல்லா இருங்கப்பு..

said...

Thattu,
Naan eluthum blog kooda ungada Sketch paathu thodanginathu than. Enakkum unga sketch pidikum Bt aarambathila vaasichu comments pottutu penthu as u said, veali parakil vitutan. Ungal pathivu varukaikaana kathai is very interesting...
:)

said...

ஓ... நீர்தான் அப்'பாவை'யோ?

பின்னூட்டக்காரியாகத்தான் உம்மைத் தெரியும். ஏற்கனவே இவ்வலைப்பதிவைப் பார்த்திருந்தாலும் இது பாவையால் எழுதப்படுவதென்பது தெரிந்திருக்கவில்லை.

முந்தி லாலலோல பாக்கியசோதி சரவணமுத்துவோ சுந்தரவல்லியோ ஏதோ ஒரு பேரிலயும் பின்னூட்டங்கள் வாறது அடிக்கடி. கூடுதலா சயந்தனுக்குத்தான் பின்னூட்டம் தவறாமல் வரும். தனக்கு அவவை நல்லாத் தெரியுமெண்டு சயந்தனும் சொன்ன ஞாபகம். அப்பவெல்லாம் அது நீர்தான் எண்டு நினைச்சுக் கொள்ளுவன்.

said...

புல்லு புல்லா அரிக்குது கஸ்தூரி..:)

வசந்தன்

பாக்கியசோதி சரவணமுத்து உங்களோட சண்டைக்கு வராட்டில் சரி..

அது லாலலோலலவில பாக்கியசுந்தரவல்லி.. பெயரைத் தவறாக சொல்லிய உங்களுக்கும் அதை நானெனக் காட்டிக் கொடுத்த சயந்தனுக்கும் பலத்த கண்டனங்களை பதிவு செய்கிறேன்..

said...

நினைவுபடுத்தியதற்கு நன்றி வசந்தன்..
புஸ்பவல்லி என்ற பெயரிலும் வருவதுண்டு..

கஸ்தூரியின் பதிவு பார்த்தேன். மூன்று நான்கு பதிவுகளைத்தவிர மற்றப்பதிவுகள் நன்றாகவே உள்ளன.

said...

மற்றது எல்லாரும் தயவு செய்து இனிமேல் "கணினி" எண்டு பாவியுங்க///

இது அதிகார உத்தரவு.. தயவுசெய்து என்ற வார்த்தையைச் சேர்த்துக்கொண்டு மக்களை நெருங்கி வருகிற அதிகாரம்தான் இது ..

மக்கள் தமக்கானதைத்தெரிவு செய்வார்கள்..

:))))))))))))))))))))))))))))))

said...

என்னாது???.. புஸ்பவல்லியா??? நல்லாயில்லை பெயர்.. எனக்கு மறந்தே போச்சுது.. ஆனால் இதில்லை..

//கஸ்தூரியின் பதிவு பார்த்தேன். மூன்று நான்கு பதிவுகளைத்தவிர மற்றப்பதிவுகள் நன்றாகவே உள்ள

:)) :))

//இது அதிகார உத்தரவு.. தயவுசெய்து என்ற வார்த்தையைச் சேர்த்துக்கொண்டு மக்களை நெருங்கி வருகிற அதிகாரம்தான் இது ..

மக்கள் தமக்கானதைத்தெரிவு செய்வார்கள்..

கண்டனம் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் கண்டிப்பது தான் இது.. :P

said...

உங்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள்

சாயினி : உங்கள் எழுத்தாற்றலுக்கு கிடைத்துவந்த மரியாதை அண்மையில் நீங்கள் பெற்ற பட்டம் மூலம் மேலும் கிடைக்கும். நண்பர்கள் தொல்லை தந்தாலும் பரீட்சைகளில் கொடி நாட்டுவீர்கள். சாமத்தில் பின்னூட்டங்கள் இடுவதைத் தவிர்க்கவும். கோட்டடி அம்மன் உங்களுக்கும் அருள் புரிவார்.

http://enularalkal.blogspot.com/2009/09/2.html

said...

//வந்தியத்தேவன் & சயந்தன்
முடிந்தவை.. முடிந்தவையாக இருக்கட்டும்.. :) //

நன்றி சாயினி உங்கள் பிரச்சனை எனக்குத் தெரியும். அடுத்த சந்திப்பில் நீங்கள் தான் பிரதான சொற்பொழிவாளர்( நக்கல் அல்ல நிஜம்)

said...

உங்கள் வலைப்பதிவுக்கு இது என் முதல் வருகை. பதிவெழுத வந்த கதை நன்றாக எழுதி இருக்கின்ரீர்கள்.

said...

//தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுவது எரிச்சலூட்டுவது போல் ஆங்கிலச் சொற்களை தமிழில் எழுதுவது உங்களுக்கு எரிச்சலூட்டுவதில்லையா? இந்தியப் பத்திரிகைகளில் இருந்த இந்தப் பழக்கம் வலையுலகத்தில் எம்மவரிடையேயும் சகஜமாகக் காணப்படுகிறதே....//

எனக்கும் தமிழை தமிழிலும், ஆங்கிலத்தை ஆங்கிலத்திலும் எழுதுவதே பிடித்திருக்கிறது. நானும் அனேகமாக இந்த முறையையே பின் பற்றுகிறேன் :).