சமீப காலமாக ஒரே மரணச் செய்திகள்.. மரணம் மலிந்து விட்ட நாட்டில் இருந்து கொண்டு குடும்பத்தில், உறவினர்களில் பலரையும் இழந்து பழக்கமாகி போன நிலையில் இப்போதெல்லாம் எந்தவொரு உயிரிழப்பும் என்னைப் பாதிப்பதில்லை.. கேட்ட நிமிடத்தில் ஏற்படும் அந்த ஒரு உணர்வைத் தவிர வேறு உணர்வுகளற்ற மரக்கட்டையாகி போனேனோ என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் இன்றைய மரணம், இல்லை இன்னமும் உணர்வுள்ளவளாக இருக்கிறாயென்று உணர்த்தியது..
சமீப காலமாக மரணத்திற்காக கவலைப்படுபவர்களாக காட்டிக் கொள்பவர்கள், துக்கம் விசாரிப்பவர்கள், என்ன நடந்தது என்று ஆதியோடந்தமாக கேட்டுக் கொள்பவர்கள், என்று யாரைப் பார்த்தாலும் ஒரு விதமான எரிச்சலே வருகிறது..
ஒரு மாதம் இருக்கும்.. அப்பாவின் சகோதரி(மாமி) இறந்து விட்டதாக யாழ்பாணத்திலிருந்து அழைப்பு வந்தது.. காலை வேளையில் வரும் தொலைபேசி அழைப்புக்கள் இந்த மாதிரியான செய்திகளையே கொண்டு வரும் என்று தெரியும். அத்தோடு இரண்டு நாட்கள் முன்பாக அவர் இறக்க முதலே இறந்தாக வந்த செய்தி அவரின் இறப்பு நிச்சயம் என்று தெரிவித்திருந்தது.. ஆகவே தொலைபேசி அடிக்கும் போது அண்மையில் இருந்தும் அம்மா எடுக்கட்டும் என்று பேசாமல் இருந்தேன்..
மரணத்தின் மீது கொண்ட பயத்தாலல்ல.. செய்தியை சொல்பவருடன் அது பற்றி கதைக்க வேண்டிய சந்தர்ப்பத்தை தவிர்ப்பதற்காகவே... சொந்தங்களுடன் அவ்வளவாக நெருங்கிப் பழகாத குணம் என் குடும்பத்தவர்க்கு இருந்த போதும் மாமி குடும்பத்தோடு ஒட்டுறவாகவே என்றும் இருந்து வந்தோம். அருமையான ஒரு பெண்மணி.. எந்த ஒருவரும் அவரைக் குறை சொல்லி நான் அறிந்ததில்லை.. எல்லோருடனும் நல்லுறவைப் பேணி வந்தவர் அவர்..
மீண்டும் ஒரு மரணம்... என்னைத் தன் மாதிரியாக(Model) நினைக்கும் என்னை விட இரண்டு வயது குறைந்த தோழியின் அப்பா... சிறு வயதில் எங்களுடன் கிரிக்கெட், கரம், காட்ஸ், செஸ் என எல்வாவற்றிலும் சேர்ந்து கொள்வார்.. அந்த காலத்தில் தன் பிள்ளையைப் போலவே என்னையும் நடத்தியவர்.. அதுவும் யாழ்ப்பாணத்திலிருந்து தொலைபேசி மூலம் ஒரு காலை நேரத்தில் தெரிய வந்தது.. அந்த நேரம் அம்மா சமையல் வேலையில் இருக்க நானே அழைப்பை எடுக்க வேண்டியதாக போயிற்று.. செய்தியை என்னிடம் சொல்ல எதுவுமே கூறாது அம்மாவிடம் கொடுத்து விட்டு செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர்ந்தேன்..
பரீட்சைக்காக விடுமுறை எடுத்திருந்த வாரத்தில் என் மேலாளரின் தகப்பானாரின் மறைவு.. 95 வயது வரை நன்றாக இருந்தவர்.. கடைசி நிமிடத்திலும் நன்றாகவே இருந்தாராம்... மரண வீட்டிற்கு செல்லவில்லை.. உண்மையைச் சொன்னால் எனக்கு செல்ல வேண்டுமென்ற எண்ணமே கிடையாது.. 95 வயது வரை வாழ்ந்தவர் இன்னமும் வாழ்ந்திருக்கலாமேயென்ற என் துக்கத்தை பகிர்ந்து கொள்ளவா போகப் போகிறேன்..
சம்பிரதாயத்துக்காகத் தானே.. சம்பிரதாயத்தக்காக எதையும் செய்ய வேண்டிய கடப்பாடு எனக்கு இல்லை என்ற நினைப்போடு இருந்த போதும் அவர் மீண்டும் வேலைத்தளம் வரும்போது எவ்வாறு எதிர்கொள்வது என்ற குழப்பம் நேரிட நண்பியைக் கேட்டேன்.. ஆறுதல் தெரிவித்து mail அனுப்பி விடு என்றாள்.. ஆறுதல் சொல்ல வேண்டுமென்ற எண்ணமும் இல்லை என்று அவளுடன் விவாதித்தேன்.. மற்றவர்கள் சென்று வந்திருந்த நிலையில் mail தானே, அனுப்பி விடு, இல்லாவிடில் நேரில் வரும் போது எதிர் கொள்ள கஷ்டம் என்ற அவளது ஆலோசனையின் நிமித்தம் mail அனுப்பினேன்..
மீண்டும் என் நண்பியின் அப்பாவின் மரணம்.. வேலை நேரத்தில் செல்ல வேண்டி ஏற்பட்டதால், காரணத்தை சொல்லி அனுமதி கோரினேன்.. அவரின் மனதில் எப்படியும் இவள் தனது வீட்டு நிகழ்வுக்கு வரவில்லை என்ற நினைப்பு வந்திருக்கும் தானே... இது போன்ற சந்தர்ப்பத்தை தவிர்ப்பதற்காகத் தான் போயிருக்க வேண்டுமோ என்ற அந்த நிமிடத்தில் ஏற்பட்டது.
சரி.. நான் தான் எதற்காக மரண வீட்டிற்கு செல்கிறேன்.. உண்மையாக எனக்குள் கவலை இருக்கிறதா? நண்பி தகப்பனை இழந்து விட்டாள் என்ற வருத்தத்தை தவிர வேறு என்ன கவலை எனக்கு.. நான் போவது அவளுக்க உண்மையாகவே ஆறுதலை அளிக்குமா?
மரண வீட்டில் இருப்பவர்கள் எதற்காக அழுகிறார்கள்? சென்ற உயிருக்காகவா? இல்லை குறிப்பிட்ட அந்த உறவு இல்லாமல் இனி என்ன செய்யப் போகுறோம் என்பதற்காகவா? இப்படி யோசிப்பது பைத்தியக்காரத்தனமாக தோன்றினாலும் மரண வீட்டில் வைத்து என்னால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை..
உறவுகளின் மரணம் பற்றிய பாதிப்பு இல்லாதபோதும் ஒரு சில மரணங்கள் ரொம்பவும் பாதிக்கின்றன.. அந்த மரணம் கூட எதற்காக என்னைப் பாதிக்கிறது.. போராட்டத்தில் ஒரு ஈடு செய்ய முடியாத அங்கத்தவரை இழந்து விட்டோம் என்பதற்காகவா என்று கேட்டால் ஆம் அதுவும் தான்... ஆனால் அது மட்டுமல்ல...
இன்று வேலைத்தளத்தில் இருந்த போது அம்மாவின் தொலைபேசி அழைப்பு..
Net இல் News பார்த்தாயா?
இல்லை ஏன்?
கேட்டனான்.. - அம்மாவின் குரல் சரியாக இல்லை
என்னாச்சு, சொல்லங்கோவன்..
குண்டுத் தாக்குதலாம்..
எங்க கொழும்பிலயோ..
இல்லை கிளிநொச்சியில்.. அழைப்பு துண்டிக்கப்பட்டது..
என்ன இது.. நெடுகத்தானே கிளிநொச்சியில போடுறாங்க.. இவ என் இப்படி பதட்டப்படுகிறா.. (என்ன ஒரு நினைப்பு.. அடிக்கடி போட்டால் அடிக்கடி மரணச் செய்திகள் கேட்டால் அந்த மரணங்களில் இழப்பு புரிந்து கொள்ளப்படாத நிலை) யோசிச்சுக் கொண்டே செய்தியைப் பார்த்தேன்.. எதிர்பார்க்காத செய்தி.. அம்மாவின் பதட்டத்திற்கான காரணம் புரிந்தது.. அம்மாவை மீண்டும் அழைத்து "ஓம் news இருக்கு" என்று சொன்னேன்.. அம்மா TV யில் போன breaking news பார்த்து விட்டே எனக்கு அழைப்பு எடுத்திருந்தாலும் அதை நம்பவில்லை. நான் சொல்லும் போதும் நம்பவில்லை... அவர்களே அறிக்கை விட்டிருக்கிறார்களென வாசித்துக் காடடிய பின்னரே நம்பினா.. நீண்ட காலமாகவே தமிழ்ச்செல்வன் மரணம், அவர் தலைமையுடன் கருத்து வேறுபாடு என்று பல புரளிகளை இலங்கை அரசாங்கம் சொல்லிக் கொண்டிருந்த நிலையில் எப்படி நம்ப முடியும்..
ஆனால் இதுவும் அப்படி ஒரு செய்தியாக இருக்கக் கூடாதோ என்று அந்த நேரத்தில் மனம் ஏங்கியது..
தமிழ்ச்செல்வன்...
ஒரு விடுதலைப் புலி உறுப்பினராக, அரசியல்துறைப் பொறுப்பாளராக மட்டும் இல்லாமல் எங்கள் குடும்பத்தில் ஒருவராக அல்லது நெருக்கமான ஒருவராக அவர் எங்கள் மனதில் இருக்கிறார்..
அன்ரன் பாலசிங்கத்துக்குப் பிறகு நிறையவும் பாதித்த மரணம் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனுடையதே..
எப்போதும் சிரித்த முகம்... சோகமான ஒரு விஷயத்தை சொல்லும் போதும் அவர் முகத்தில் ஒரு சிறு புன்னகை இருப்பது போலவே தோன்றும்.. அந்தச் சிரித்த முகம் எம்முடன் இல்லை.. பேட்டிகளில் நேர்மைத்தன்மையுடன் கூடிய பதில்.. சொல்ல முடியாக கேள்விகளுக்கு நேரடியாக மறுத்தவிடும் நாகரீகம்..
விமானத் தாக்குதலில் அதுவும் ஒரு எட்டப்பனின் காட்டிக் கொடுப்பில் உயிரை இழக்க வேண்டி வந்தது கொடுமை.. எம்மிடையே எட்டப்பன்கள் இருந்து கொண்டே வருவதே தமிழனின் சாபக்கேடு..
வீர மரணமடைந்த பிரிகேடியர் தமிழ்ச்செல்வனுக்கும் சகபோராளிகளுக்கும் எனதும் என் குடும்பத்தவரதும் வீர வணக்கங்கள்.
Friday, November 02, 2007
மரணம் வலி தருமா?
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
மாண்டவீரர் கனவு பலிக்கும் மகிழ்ச்சி கடலில் தமிழ்மண் குளிக்கும்.
ம்.. இன்னுமின்னும் உயிர்களை இழக்காமல் அந்த நாள் வெகு விரைவில் வரவேண்டுமென்பதே அவா..
//மரண வீட்டில் இருப்பவர்கள் எதற்காக அழுகிறார்கள்? சென்ற உயிருக்காகவா? இல்லை குறிப்பிட்ட அந்த உறவு இல்லாமல் இனி என்ன செய்யப் போகுறோம் என்பதற்காகவா? இப்படி யோசிப்பது பைத்தியக்காரத்தனமாக தோன்றினாலும் மரண வீட்டில் வைத்து என்னால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை..//
நானும் மரணவீட்டில் இப்படித்தான் பலமுறை யோசித்திருக்கிறேன்...
இதை விட கனடாவில் ஒருவர் இறந்தால் இங்கு அவரின் வீட்டிற்கு துக்கம் விசாரிக்கசெல்வது... அது பரவாயில்லை...
இதில சிரிப்பு என்னெண்டால் போய்விட்டு வந்து 'துடக்கு' எண்டு முழுகுவது... :)
"துக்கமே வாழ்க்கையானால், வாழ்வில் இனி துக்கம் வராது...!"
Post a Comment