Sunday, October 21, 2007

நான் விற்கப்படுகிறேன்..



சீதனம் பெண்ணிற்குரிய ஓர் பிரச்சினை மட்டுமே என்ற பரவலான விம்பத்தை கலைக்கும் ஓர் ஆணின் உணர்வு..

...



நான் விற்கப்படுகிறேன்..

நான் விற்பனைக்காய்
இருக்கிறேன்..
ஆச்சரியப்படுகிறீர்களா?
சத்தியமாய்ச் சொல்கிறேன்..
சீதனச் சந்தையில்
சிறந்ததொரு பண்டமாய்..
நான் விற்பனைக்காய்
வைக்கப்பட்டிருக்கிறேன்.

என் உணர்வுகள்
எப்போதோ
மொத்தமாய் விற்பனை
செய்யப்பட்டாயிற்று..
கழித்து விடப்பட்ட
எஞ்சிய சில
நினைவுகளுடன்
நுகர்வோரு(ளு)க்காய்க்
காத்திருக்கிறேன்..

அதிக விலையி்ல்லை..
"இஞ்சினியர்" மாப்பிள்ளை
என்பதால் ஒரு
இருபத்தைந்து லட்சம்
மது மாந்த மறுக்கும்
மனதுடன் இருப்பதால்
மற்றுமோர் பத்து இலட்சம்
மனதிற்கினிய மாதுவை
மறப்பதற்காய்
மேலுமோர் ஐந்து லட்சம்
புகைப் பிடித்துக் கறுத்துப்
போகாத உதடுகட்காய்
இன்னுமோர் பத்து லட்சம்
வேறென்ன?
வீடு கார் எல்லாம்
வழமையாய்
வாங்குவது தானே..




என்அழகு
என் கம்பீரம்
என் குணம்
பழகும் இனிய சுபாவம்..
ச்சே..!
எது எதற்கு
விலை என்கிற
விவஸ்தையே
இல்லை என்கிறீர்களா?
அதுவும் சரி தான்..
வேண்டுமானால்
போனஸாய் போகட்டும்..

நான் விற்கப் படப்
போகின்றவள்
நல்ல குணமுடையவளாம்
குணத்தைக் கொண்டு போய்க்
குப்பையில் போடட்டாம்
அஞ்சுகம் மாதிரி
அழகானவளாம் -
கொஞ்சம் விலையைக்
குறைக்க யோசிக்கலாமாம்..
ஆபிரிக்கக் கண்டத்து
அழகி போன்றவளாம் -
அப்படியா?
ஐந்து லட்சம்
அதிகம் தந்தால்
'அட்ஜஸ்ட்' பண்ணிக்கலாமாம்..

சீதன அரக்கனை
அழித்தொழித்து
ஆண்களிடமிருந்தான
அடிமைச் சங்கிலியைத்(?)
தகர்த்தெறியப் போவதாய்
ஆர்ப்பரிக்கும்
பெண்ணிய வாதிகளே..

இங்கே நான், ஒரு ஆண்
விற்கப் படுகிறேன்

எனக்குள்ளும், ஒரு தலையாயக்
காமன் கணை எய்து
காதல் நரம்புகளின்
தொழிற்பாட்டைத்
தொடக்கி வைத்த
காதலியின் நினைவுகளை,
காதலின் உணர்வுகளை
காற்றினிலே கரைத்து விட்டு,
என் ஆசைகளை
அபிலாசைகளை
அனலினிலே
தகித்து விட்டு,
பத்தரை மாற்றுத்
தங்கமாய் - ஒரு
பத்தினியிடம்
விற்பதற்காகப்
பத்திரமாய்
வைக்கப்பட்டிருக்கிறேன்..

எல்லாம் சரி..
நான் விற்கப்படுவது
எதற்காய்த் தெரியுமா?

என் கூடப் பிறந்த
சகோதரிகட்கு
மாப்பிள்ளைகள்
வாங்குவதற்காய்

என் அன்னை
என்னை விற்கிறாள் -
என் மனைவியாய்
அமையப் போகிறவளுக்கு

ஆம்! இங்கே நான்
விற்கப்படுகிறேன்
நங்கை ஒருத்தியால்
மங்கை ஒருத்திக்கு
மரணித்துப் போன
மன உணர்வுகளுடன்..

- வல்லிபுரம் சுகந்தன்..
பேராதனைப் பல்கலைக்கழக இளங்கதிர் 33 வது ஆண்டு மலரிலிருந்து..

11 comments:

Thamiz Priyan said...

நல்ல உணர்வுள்ள கவிதை. மறுவெளியீட்டுக்கு உகந்தது தான்.

cheena (சீனா) said...

நல்லதொரு கவிதை. மாறுபட்ட சிந்தனை. சீதனம் பற்றிய ஒரு ஆணிண் கணிப்பு. விற்பனைப் பொருளாக நுகர்வோளுக்காக காத்திருக்கும் ஆணின் கணிப்பு.

// மனதிற்கினிய மாதுவை
மறப்பதற்காய்
மேலுமோர் ஐந்து லட்சம்//

//என் கூடப் பிறந்த
சகோதரிகட்கு
மாப்பிள்ளைகள்
வாங்குவதற்காய்//

//என் அன்னை
என்னை விற்கிறாள் -
என் மனைவியாய்
அமையப் போகிறவளுக்கு//

சாட்டை அடிகள் - என்ன செய்வது - திருந்த - திருத்த முடியுமா ?? தீர்வே இல்லாத பிரச்னை

காண்டீபன் said...

கவிதை நல்லாயிருக்கு,
மறுவெளியீட்டுக்கு நன்றி....

Chayini said...

கருத்துகளுக்கு நன்றி..

Nimal said...

நானும் விற்கப்படலாம்...
இன்னும் சில காலம் இருக்கிறது...
ஆனாலும் அதற்குள்ளாக எதுவும் பெரிதாக மாறிவிடப்போவதில்லை (?)

amir பிரசான் said...

இது நல்ல கவிதை மட்டுமல்ல
இது நல்ல உணர்வுல்ல உண்மையும் கூட

nimal.......
நானும் விற்கப்படலாம்...
இன்னும் சில காலம் இருக்கிறது...
ஆனாலும் அதற்குள்ளாக எதுவும் பெரிதாக மாறிவிடப்போவதில்லை .......
அந்த
தொகைகளை தவிர........இல்லையா?????

Chayini said...

நன்றி நிமல் & Amir prashan,

விற்கப்படாமலும் விடலாமில்லையா? என் வீட்டு ஆண்கள் (Engineers உள்ளடங்கலாக) இதுவரை விற்கப்படவில்லை.. விற்கப்படவில்லை என்ற பெரியவர்களின் வருத்தமிருப்பினும் தங்களை விற்க அவர்கள் அனுமதிக்கவில்லை..

என்ன சொல்ல வாறனெண்டா விற்கப்படாமல் இருக்கவும் சாத்தியமிருக்கு..

சகோதரிகளுக்காக விற்கப்படுவது ஒருபுறமிருக்க விற்கப்படாவிட்டால் மதிப்பில்லை என்று விற்கப்படுவது தான் வேதனை..

Anonymous said...

Paavai naan ungal karuthai aamothikiren

//
சகோதரிகளுக்காக விற்கப்படுவது ஒருபுறமிருக்க விற்கப்படாவிட்டால் மதிப்பில்லை என்று விற்கப்படுவது தான் வேதனை..
//

ithu mutillum unmaye

இறக்குவானை நிர்ஷன் said...

சீதனச்சந்தையில் ஆண்விற்கப்படும் விதத்தை அருமையாகச் சொல்லியிருக்கிறார்... இதை எத்தனைப் பெண்கள் அறிவார்கள் என்பதுதான் கேள்வி.

Anonymous said...

original ithatku munbe vaasiththirukkiren. aanaalum meendum vaasikkum pothum athai rasippavarhaludan share pannum pothum innum santhosham.
Hats off to suhanthan and paavai too.
Sorry for sending the comments in thanglish. I don't know.

jeyamee said...

"நான் விற்கப்படுவது
எதற்காய்த் தெரியுமா?
என் கூடப் பிறந்த
சகோதரிகட்கு
மாப்பிள்ளைகள்
வாங்குவதற்காய்"
அழகான வரிகள்.
அழகான கவிதையும் கூட.
யதார்த்தத்தை அழகாக‌
கொஞ்சம் வித்தியசமாக‌
கூறி இருக்கிறீர்கள்