Thursday, November 27, 2008

சக்தியின் செய்தியும் இன்றைய உரையும் மும்பைக் குண்டுவெடிப்பும்

நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்... இன்றைய 6.55 க்கு சக்தி TV சொல்லும் முதன்மைச்செய்தியில் மாவீரர் நாள் உரை பற்றிய சின்னக்குறிப்பு கூட இல்லை. இந்தியாவின் மும்பைச் செய்திகளைப் பற்றி மட்டுமே சொல்லி முடித்துக் கொண்டார்கள். 45 நிமிடத்துக்குள் தயார் செய்து கொள்ள முடியவில்லையாக்கும் என்று நினைத்துக் கொண்டேன். 8 மணிக்கு சொல்லும் பிரதான செய்திகளுக்கு முன்னதாக 7.45 அளவில் சொல்லும் Headline first இலும் கூட மீண்டும் இந்திய மும்பைக் குண்டுவெடிப்புகள் பற்றி கொஞ்சம் விரிவாகவும் ஆறோ ஏழாவது தடைவையான ஜேர்மன் பிரஜை பற்றிய வன்புணர்வு பற்றியும் குறிப்பிட்டார்கள்.

எதனால் இந்தப் புறக்கணிப்பு?... இலங்கை அரசாங்கத்தின் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தலா.. இல்லை, அவர்களே மாவீரர் தின உரையை முக்கியமாகதான கருதவில்லையா?

என்ன தான் அரச கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இயங்கினாலும் இலங்கைத் தமிழரின் ஒரே தொலைக்காட்சியென இனங்கொள்ளப்படும் சக்தி TV மாவீரர் தின உரை பற்றிய செய்தியை சேர்த்துக் கொள்ளாதது ஏற்றுக்கொள்ளப்படக்ககூடியதல்ல...

முன்பு சமாதான காலத்தில் செய்தியை இடைநிறுத்தி சக்தி, சூரியன் வானொலிகள் மாவீரர் தின உரையை ஒலிபரப்பினார்கள். இந்த முறை வானொலிகளில் ஒலிபரப்பினார்களோ தெரியவில்லை.. நான் வானொலி கேட்பதில்லை. சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாததால் நிச்சயமாக சக்தி FM இல் ஒலிபரப்பியிருக்க மாட்டார்களெனவே நினைக்கிறேன். தெரியவில்லை.

இதை எழுத ஆரம்பிக்கும் போது கூட பிரதான செய்திகளில் சொல்வார்கள் என்ற எதிர்பார்ப்புடனே ஆரம்பித்தேன். ம்.. தலைப்புச் செய்தியில் அதைத் தவிர எல்லாம் சொன்னார்கள்.. 30 நிமிடச் செய்தியில் இரண்டு நிமிடங்கள் கூட ஓதுக்க முடியாத அவர்கள் தமிழரின் வானொலி என்று சொல்லிக் கொள்வது சரியானது தானா?.. இந்நாட்டின் மேன்மை தங்கிய ஜனாதிபதி மும்பைக் குண்டு வெடிப்பை கண்டிப்பது கூட தலைப்புச் செய்தியில் உள்ளடக்கப்பட்டிருந்தது..


யார் யாரைக் கண்டிப்பது என்று விவஸ்தை இல்லை?? வன்னி மக்களுக்கு மட்டுமில்லை தினம் தினம் கைதுகள், கொலைகள் என தென்னிலங்கையிலும், விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கிழக்கிலங்கையிலும் தொடர்ந்து கொண்டிருக்க அதற்கெல்லாம் காரணமானவர் அதையே செய்பவர்களைக் கண்டிக்கிறாராம்.

வன்னியில் தினம் தினம் மக்கள் எதிர்கொள்ளும் அவலங்கள் எதையும் கண்டுகொள்ளாத, தமிழகத்தவரது ஆதரவுப் போராட்டங்களைக் கண்டு கொள்ளாத, சக்தி போன்ற ஊடகங்கள் கொழும்பில் ஒரு சிறிய குண்டு வெடிப்பு யாருக்குமே சேதமில்லை என்றாலும் பலமுறை Breaking news என்று மீண்டும் மீண்டும் ஒளிபரப்புகிறார்கள்.

ஒளிபரப்புவதில் பிரச்சினைகள் இருப்பது புரிந்து கொள்ளக் கூடியதாக இருப்பினும் ஒரு ஊடகம் என்ற வகையில் அதுவும் தமிழ் மொழியின் சக்தி எனக் கூறிக் கொள்ளும் ஊடகம் இன்றைய உரையைப் புறக்கணித்தது போன்ற செயல் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதல்ல.

ஊடகவியலாளருக்கான அச்சுறுத்தல் காரணமாயின், மேவின் சில்வா மற்றும் முன்னாள் JVP யின் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்சவினை அத்துணை பலமாக எதிர்க்கும் போது அச்சுறுத்தல் இருக்கவில்லையா...

மேலும் இந்த மும்பைக் குண்டு வெடிப்பைப் பற்றி பெரும்பான்மையினத்தவர் சந்தோஷம் கொள்வதை வெளிப்படையாக காட்டிக் கொள்கிறார்கள். இந்தப் பரபரப்பில் இந்தியா, இலங்கை விடயத்தில் தலையிடாது.. தமிழகத்தவர் அழுத்தம் கொடுப்பது குறைந்துவிடும் என்ற எண்ணமே அவர்கள் சந்தோஷத்திற்கான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.. அடுத்தவர் வலி இவர்களுக்கு சந்தோஷம்..

6 comments:

said...

பாவை நீங்கள் பாவம். சக்தி இப்படி செய்தால் நாளை அவர்கள் யாரும் உயிருடன் இருப்பதில்லையா. சக்தி தமிழரின் தொலைக்காட்சியா....!நல்ல ஜோக் போங்கள்!

said...

//இலங்கை அரசாங்கத்தின் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தலா.. //
வேறு என்ன தான் காரணமாக முடியும்..!

அவங்களும் பாவம் தானே... இப்பதான் இன்னொரு ஊடகவியலாளர் உள்ள போட்டு வந்திருக்கிறார். மற்றவைக்கும் பயம் இருக்கும் தானே.

Anonymous said...

பாவை சக்தியை எல்லாம் தமிழன் தொலைக்காட்சி என்கிறீர்களே. இலங்கையில் தமிழர்கள் கைது செய்யப்படும்போதும் கடத்தப்படும்போதும் கொல்லப்படும்போது இவர்கள் இசை இளவரசர்கள் நடத்துவார்கள். சக்திக்கும் முதுகெலும்ப்பு இல்லை அதனை நடத்துபவர்களுக்கும் இல்லை அங்கேயிருக்கும் அறிவிப்பாளர்களுக்கு முதுகெலும்புடன் மூளையும் இல்லாதவர்கள்.

இவர்கள் மேர்வின் சில்வாவையும் ஜேவிபியையும் தான் கிண்டல் செய்வார்கள்.

Anonymous said...

நேர்மையான, கூர்மையான பதிவு!
பலரின் கேள்விகளை பதிவாகப் போட்டிருக்கிறீர்கள், விளங்க வேண்டியவர்களுக்கு விளங்குமா?!

-Mathu

said...

//ஒரு ஊடகம் என்ற வகையில் அதுவும் தமிழ் மொழியின் சக்தி எனக் கூறிக் கொள்ளும் ஊடகம் இன்றைய உரையைப் புறக்கணித்தது போன்ற செயல் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதல்ல//

நிட்சயமாக... இது போன்ற புறக்கணிப்புக்களை சரியென ஏற்றுக்கொள்வதென்பது மிகக் கடினமான காரியம்தான்.. ஆனாலும் பயங்கரமான ஊடக அடக்குமுறையினைக் கடைப்பிடிக்கும் அரசிற்கு பணிந்தியங்கினால்த் தானே தமது 'இருப்பை' அவர்கள் 'உறுதிப்படுத்த' முடியும்.. இது தெரியாதா உங்களுக்கு ...

said...

அச்சுறுத்தலை காரணம் காட்டி வேறு எதையும் இருட்டடிப்பு செய்யட்டும்.. அதைத் தான் அவை செய்கின்றன. தமிழர் பிரதேசச் செய்திகள் சக்தியில் ஒலி/ஒளிபரப்பப்படாததும் பழகிவிட்டது.

ஆனால் நேற்று நேரடியாக உரையை ஒலி/ஒளிபரப்பியிருக்க வேண்டாம். பின்னரும் எதையும் ஒலி/ஒளிபரப்ப வேண்டாம். குறைந்தது உரையின் சாராம்சத்தினை தெரிவித்திருக்க வேண்டிய கடப்பாடு அவர்களுக்கு இல்லையா?

ஒப்பீட்டளவில் இணையப் பாவனை பெரிதும் குறைவாகவுள்ள நாட்டில் தமிழ்மக்கள் அடுத்த நாள் பத்திரிகை வரும் மட்டும் காத்திருக்க வேண்டுமா?

இந்தப் பத்திரிகைகளும் அரச கட்டுப்பட்டு பிரதேசத்தினுள் தானே இயங்குகின்றன.

நேத்ரா தொலைக்காட்சியின் "நாளேடுகளில் இன்று" நிகழ்ச்சியிலும் கூட தமிழ் பத்திரிகைகள் மாவீரர் நாள் உரைக்கு முக்கியத்துவம்கொடுத்திருக்கின்றன என்பதோடு முடித்துக் கொண்டார்கள்.
என்ன கூறப்பட்டது என்று எதுவும் கூறாமல் அது பற்றிய சிங்கள அரசியல்வாதிகளின் கருத்துக்கள் சிங்கள பத்திரிகைளிலலிருந்தவை முற்றாக வாசிக்கப்பட்டன. இது எதிர்பார்க்கப்பட்டதொன்று.. ஆனால்..........