பொதுவாகவே பூக்களைப் படம் பிடிப்பது எனக்கு மிகவும் பிடித்தமானது. ஆனால் படம் பிடிப்பதைத் தாண்டி இந்தப் பூ விஷேடமானது. எனது ஏழு, எட்டு வயதுகளில் அறிமுகமான பூ. வருடத்தின் ஒவ்வொரு கார்த்திகை மாதங்களில் மட்டுமே இந்த பூ மலரும் என்று அறிந்து கொண்டதாலோ இல்லை நானறிந்து அந்த ஓர் இடத்திலேயே இதனைக் காணக் கூடியதாக இருந்ததாலோ அதுவுமில்லாமல் இதன் கண்ணைக் கவரும் நிறமோ அல்லது எல்லாம் சேர்ந்தோ அப்பவே என் விஷேட கவனிப்புக்கு உள்ளாகியது. கார்த்திகை மாதத்தை அண்டிய மாதங்களில் பாடசாலை செல்லும் போது எங்கள் வீட்டிலிருந்து இரண்டு மூன்று வீடுகள் தாண்டியுள்ள வாசிகசாலையை அண்மித்து மலர்ந்திருக்கும் இந்தப் பூவை தினமும் தரிசித்து(?) செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.
இப்போது இந்தப் பூ தமிழர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்ற பூவாகி விட்டது. ஆம்.. தமிழீழ தேசத்தின் தேசியப்பூவாக கார்த்திகைப்பூ தமிழீழ விடுதலைப் புலிகளால் அதிகார பூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
2005ம் ஆண்டின் கார்த்திகை மாதத்தில் கொழும்பிற்கு வெளியே தலாஹேன என்ற இடத்திற்கு அண்மையில் ஓர் வீட்டின் வேலியோரத்தில் காணக் கிடைத்தது. ஒவ்வொரு முறை அந்த இடத்தை அண்மிக்கும் போதும் இறங்கி பூவைப் பறித்து விடத் தோன்றும். ஆனாலும் சிங்களம் அறியாத நான் பழக்கமேயில்லாத புதிய முற்று முழுதான சிங்கள இடத்தில் இறங்குவதிலுள்ள ஆபத்தை உணர்ந்து எண்ணத்தை கைவிட்டு விட்டேன்.
2 வருடங்கள் கடந்து விட்ட பின்னர், 2008 இன் ஆரம்பம் முதல் மீண்டும் தினமும் தலாஹேன தாண்டிச் செல்ல வேண்டிய தேவை. கார்த்திகையில் தான் பூ மலரும் என்றாலும் அந்த வீட்டின் வேலியோரத்தில் செடியாவது இருக்கிறதா என்று அதனை நோக்கியபடியே செல்வது வழமையாகி விட்டிருந்தது.
இப்போது அந்த இடத்திற்கு செல்வதற்கு மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமளவிற்கு இடம் பழக்கப்பட்டிருந்த போதும் இறங்கி ஏறும் அளவிற்கு பழக்கப்படவில்லை.
கடந்த கிழமை வேறு ஒரு மாற்றுப் பாதையூடாக சென்று கொண்டிரந்த போது, Pitakotte என்னும் இடத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்துக்கு கிட்டவாக வேறோரு வீட்டின் வேலியோரத்தின் மீண்டும் இந்தப் பூவைக் காணக் கிடைத்தது. இறங்கிப் பறித்து விட எண்ணிய போதும் பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்கள் பத்திரமாக செல்வதற்காக பாதை மூடப்படும் முன்னர் அந்தக் குறிப்பிட்ட வீதியை கடந்து விட வேண்டியிருந்ததால் அன்றும் என் எண்ணத்தை கைவிட வேண்டியதாகிற்று. இருந்தாலும் எங்கே இறங்குவது என்று கவனித்து வைத்துக் கொண்டேன்.
இந்த இடமும் முழு சிங்கள இடமாக இருந்த போதும், மூன்று வருடங்களுக்குள் அரைகுறையாக தெரிந்து கொண்ட சிங்களமும் மாணவ அடையாள அட்டையும் கைகொடுக்கும் என்ற துணிவில் இறங்கி ஒருவாறாக பறித்து விட்டேன். பூ பறிக்கவும் பயப்பட வேண்டிய நிலை.. ம்.. ம்..
அப்படி எதற்கு இந்தப் பூவைப் பறித்தாய் என்று யாரும் கேட்டுவிடாதவரை சந்தோஷம்.
தமிழீழ தேசத்தின் தேசியப்பூ என்பதால் இந்தப் பூவைப் பறிப்பதால் சிக்கல் என்பது ஒருபுறமிருக்க, அதனை அறியாமலிருப்பின் கூட நச்சுத்தன்மையுடைய கார்த்திகைச் செடியின் கிழங்கு தற்கொலைக்கு பாவிக்கப்படுவதால் இந்தப் பூவைப் பறிப்பவர்களை கண்காணிக்கக் கூடும்.
7 comments:
எனது ஆச்சரியம் என்னவெனில் பின்னாட்களுக்காய் இந்தப் பூ மஞ்சள் சிவப்பில் அமைந்திருப்பதுதான்.
தவிர நஞ்சு என்ற பொருத்தமும்....
இன்னுமொரு பதிவர் இதைக் காந்தள்
எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் இட்ட தொடுப்பினூடே இங்கு வந்தேன்.
விபுலாநந்த அடிகள் குறிப்பிட்ட 'கூப்பிய கைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது' என்பது இதா???
சற்றுக் குழப்பமாக உள்ளது.
இது நச்சுத் தன்மையுள்ளதெனத் தெரியாது.
இது ஒரு ஓக்கிட் வகையென அறிந்தேன்.
லண்டனில் ஒரு வீட்டுத் தாவர விற்பனைக் கூடத்தில் கண்டேன்.
ஒன்று 3 பவுணுக்கு விற்பனைக்கிருந்தது.
காந்தள் என்று பண்டைக்காலத்தில் குறிப்பிடப்பட்ட இப்பூ கலப்பை, இலாங்கிலி, தலைச்சுருளி, பற்றி, கோடல், கோடை, தோன்றி எனும் காரணப் பெயர்களாலும் சுதேச வைத்தியத்திலே வெண்தோண்டி எனவும் சிங்களத்தில் நியன்கல எனவும் சமஸ்கிருதத்தில் லன்கலி எனவும் அழைக்கப்படுவதாக கட்டுரைகள் கூறுகின்றன.
விபுலாந்த அடிகள் குறிப்பிட்டது இதுதானா தெரியவில்லை.
மேலதிகமாக சிம்பாபே(zimbabwe) நாட்டின் தேசியப் பூ என்பது இன்று அறியக் கூடியதாகவிருந்தது.
G. superba is the national flower of Zimbabwe, and was the national flower of Rhodesia. It is also the state flower of Tamil Nadu state in India and in 2004 was adopted as official flower of the de facto rebel lands of Tamil Eelam in Sri Lanka
- Wikipedia
// பூ பறிக்கவும் பயப்பட வேண்டிய நிலை.. ம்.. ம்..//
உண்மைதான்.. எழுதுவதைக்கூட சற்றுப் பார்த்து எழுதுங்கள்... இலங்கையின் 'கருத்துச் சுதந்திரத்திற்கு' உட்பட்டு ..
//மலர்ந்திருக்கும் இந்தப் பூவை தினமும் தரிசித்து(?) செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். //
எனது பாடசாலை நாட்களில் கார்த்திகைப் பூவினை பார்த்து அதன் அழகை இரசித்துள்ளேன்.. ஆனாலும் அதன் சிறப்பைப் பற்றி பின் நாட்களில் தான் அறிந்து கொண்டேன்..
ஒருநாள் விடியும்
இருளும் அகலம் ..
Superb ...
புதுவை இரத்தினதுரை அவர்களது வரிகள்.
really an eye opener for me.
- Robson
Post a Comment