Wednesday, June 13, 2007

என்னவென்று சொல்ல....

மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவின் அடுத்த நாள் என் நண்பனுடன் பேசிக் கொண்டிருந்த போது அவரது மறைவைப் பற்றிய பேச்சும் வந்தது."

ஆமா...நானும் கேள்விப்பட்டன்.. யாரது அன்ரன் பாலசிங்கம்?? " என்று ஒரு கேள்வி கேட்டான் அவன்... எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியேல... ஆடிப் போறது என்று சொல்லுவார்களே... அப்பிடி எண்டால் என்ன என்டதை அந்த நிமிஷம் தான் தெரிஞ்சு கொண்டன்.அன்ரன் பாலசிங்கத்தை தெரியாமல் என் நண்பனாக இவன்... ???இவன் இலங்கைப்பிரஜை தானா??...இலங்கையில தான் இருக்கிறானா?....குறைஞ்சது பேச்சுவார்த்தை நேரங்களில் செய்தியாவது கேட்டிருக்க மாட்டானா?....இவ்வாறாக பல கேள்விகள் எனக்குள் தோன்றிச்சுதே தவிர அவனுக்கு பதில் சொல்ல வரேல...

என்னத்தை சொல்ல???

அவன் மலையகத்தை சேர்ந்தவன்... கொழும்பில் தனியே வசிப்பவன்.. நிறைய வட கிழக்கு நண்பர்களைக் கொண்டவன்.. கொஞ்சமும் அரசியல் அறிவு இல்லை. என் சிங்கள நண்பர்களுக்கு தெரிந்தளவு கூட இனப்பிரச்சினையைப் பற்றி அறிந்திருக்கவில்லை. (நானறிந்த பெரும்பாலானோர் சிங்களப் ஊடகங்களினதும் அரசியல்வாதிகளினதும் பிரச்சாரங்களையும் மீறி எமது பிரச்சினையை.. எங்கள் உணர்வுகளை சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் நாட்டுப்பற்று என்ற பெயரில் அரசாங்கத்தை விட்டுக் கொடுக்காமல் பேசுவார்கள்.) ஒரு தமிழனாக இருந்து கொண்டு அவர்கள் அளவுக்குக் கூட இவன் இல்லையே...

அன்ரன் பாலசிங்கத்தை தெரிந்து வைத்திருப்பதற்கு அரசியல் அறிவு ஒன்றுமே தேவையில்லையே... சின்னப் பிள்ளைக்குக் கூட தெரியுமே அவரை..

ஜனாதிபதியின் தற்போதைய வாசஸ்தலமாகிய அலரி மாளிகையை அண்மித்ததாக கொழும்பின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள்ளேயே எங்கள் கல்விக்கூடம் அமைந்திருப்பதால் தினமும் கட்டடப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவம்/பொலீஸாரின் பரிசோதனைகளை முடித்தே உட்செல்ல முடியும். யாழ்ப்பாணத்திலும் எனது பாடசாலை உயர் பாதுகாப்ப வலயத்தினுள்ளேயே இருந்ததால் எனக்குப் பழகிப் போனகது தான் இந்தக் கெடுபிடிகள்.

எனக்குள் இயல்பாகவே அவர்கள் மீது இருக்கிற வெறுப்பின் காரணமாக இராணுவம்/பொலிஸாரின் பரிசோதனை நேரங்களில் கடுகடுவென்ற முகத்தோடும் அலட்சியப் போக்கோடும் நின்றே சோதனைகளை முடித்து உட்செல்லுவேன். அம்மா அடிக்கடி சொல்லுவா.. "தாக்குதல் நோக்கத்தோட வாறவை கூட இயல்பாகத் தான் இருப்பார்கள்.. நீ ஒண்டுமில்லாமல் இந்த மாதிரி நடந்து கொள்றதால உனக்குத் தான் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறாயென்று"..

எனக்கும் அது தெரிந்திருந்தாலும் என் போக்கை மாற்ற விரும்பவில்லை. என் எதிர்ப்பை இப்படியாவது காட்ட வேண்டுமென்கிற எண்ணமோ என்னவோ...

பெரும்பாலான பரிசோதனை நேரங்களில் என்னோடு நிற்கும் என் நண்பனுக்கு இது புரிவதில்லை. ஏன் இந்த மாதிரி நடந்து கொள்கிறாயென்று அவன் முன்பொரு முறை கேட்டதற்கு என்னால் முடிந்தவரை நான் அனுபவித்தவற்றையும் என் உணர்வுகளையும் விளங்க வைக்க முயற்சி செய்தேன். அவனுக்கு புரிந்த மாதிரியும் தெரியவில்லை, அக்கறை இருக்கிற மாதிரியும் தெரியவில்லை.

அதன் பிறகு அவன் இருக்கும் நேரங்களில் அவனுடனோ பிறருடனோ அரசியல்/இனப்பிரச்சினை சம்பந்தப்பட்ட எதுவுமே கதைப்பதில்லை. ஆனாலும் அன்ரன் பாலசிங்கத்தை தெரியாமல் இருப்பான் என்று நான் நினைக்கவே இல்லை. இன்னும் என்னால் அதை ஜீரணிக்க முடியவில்லை.

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் சந்ததியினர் தமது சொந்த நாட்டினைப் பற்றி தெரியாமலே போகப் போகிறார்களோ என்று கவலைப்படுவது ஒருபுறம் இருக்க இப்படியானவர்களும் இருக்கிறார்களே... இதை என்னவென்று சொல்ல....

3 comments:

said...

//"தாக்குதல் நோக்கத்தோட வாறவை கூட இயல்பாகத் தான் இருப்பார்கள்.. நீ ஒண்டுமில்லாமல் இந்த மாதிரி நடந்து கொள்றதால உனக்குத் தான் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறாயென்று"..

:)

said...

//ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் சந்ததியினர் தமது சொந்த நாட்டினைப் பற்றி தெரியாமலே போகப் போகிறார்களோ ..

ஏன் இலங்கையில் வாழப்போகின்ற அடுத்த சந்ததிக்கே நடந்த வரலாற்றினை திருபுபடுத்திக் கூறப்போகின்றார்கள். எங்கள் உலகநாயகன் தான் இனிமேல் பாடப்புத்தகங்களில் கதாநாயகன்.. அப்புறம் புலம்பெயர்ந்தவர்கள் மட்டும் என்ன செய்வது.. கர்ண பரம்பரைக் கதையாகத் தான் ஈழத்தமிழரின் கதை இனி உலாவும்... :(.

said...

//ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் சந்ததியினர் தமது சொந்த நாட்டினைப் பற்றி தெரியாமலே போகப் போகிறார்களோ என்று கவலைப்படுவது ஒருபுறம் இருக்க

இந்தப் பதிவு எழுதப்பட்டது இதில் குறிப்பிடப்பட்டுள்ள திகதியை விடவும் முன்பாக.. அழித்து மீள பதிவேற்றப்பட்டது..

இந்த எண்ணம் தவறானது என்பது சமீப காலங்களில் பொய்த்துப் போனது.. ஆனாலும் இனி எப்படியிருக்கும் என்று எதிர்வு கூற தெரியவில்லை..

//ஏன் இலங்கையில் வாழப்போகின்ற அடுத்த சந்ததிக்கே நடந்த வரலாற்றினை திருபுபடுத்திக் கூறப்போகின்றார்கள். எங்கள் உலகநாயகன் தான் இனிமேல் பாடப்புத்தகங்களில் கதாநாயகன்.. அப்புறம் புலம்பெயர்ந்தவர்கள் மட்டும் என்ன செய்வது.. கர்ண பரம்பரைக் கதையாகத் தான் ஈழத்தமிழரின் கதை இனி உலாவும்... :(.

:( :(