Sunday, October 21, 2007

நான் விற்கப்படுகிறேன்..



சீதனம் பெண்ணிற்குரிய ஓர் பிரச்சினை மட்டுமே என்ற பரவலான விம்பத்தை கலைக்கும் ஓர் ஆணின் உணர்வு..

...



நான் விற்கப்படுகிறேன்..

நான் விற்பனைக்காய்
இருக்கிறேன்..
ஆச்சரியப்படுகிறீர்களா?
சத்தியமாய்ச் சொல்கிறேன்..
சீதனச் சந்தையில்
சிறந்ததொரு பண்டமாய்..
நான் விற்பனைக்காய்
வைக்கப்பட்டிருக்கிறேன்.

என் உணர்வுகள்
எப்போதோ
மொத்தமாய் விற்பனை
செய்யப்பட்டாயிற்று..
கழித்து விடப்பட்ட
எஞ்சிய சில
நினைவுகளுடன்
நுகர்வோரு(ளு)க்காய்க்
காத்திருக்கிறேன்..

அதிக விலையி்ல்லை..
"இஞ்சினியர்" மாப்பிள்ளை
என்பதால் ஒரு
இருபத்தைந்து லட்சம்
மது மாந்த மறுக்கும்
மனதுடன் இருப்பதால்
மற்றுமோர் பத்து இலட்சம்
மனதிற்கினிய மாதுவை
மறப்பதற்காய்
மேலுமோர் ஐந்து லட்சம்
புகைப் பிடித்துக் கறுத்துப்
போகாத உதடுகட்காய்
இன்னுமோர் பத்து லட்சம்
வேறென்ன?
வீடு கார் எல்லாம்
வழமையாய்
வாங்குவது தானே..




என்அழகு
என் கம்பீரம்
என் குணம்
பழகும் இனிய சுபாவம்..
ச்சே..!
எது எதற்கு
விலை என்கிற
விவஸ்தையே
இல்லை என்கிறீர்களா?
அதுவும் சரி தான்..
வேண்டுமானால்
போனஸாய் போகட்டும்..

நான் விற்கப் படப்
போகின்றவள்
நல்ல குணமுடையவளாம்
குணத்தைக் கொண்டு போய்க்
குப்பையில் போடட்டாம்
அஞ்சுகம் மாதிரி
அழகானவளாம் -
கொஞ்சம் விலையைக்
குறைக்க யோசிக்கலாமாம்..
ஆபிரிக்கக் கண்டத்து
அழகி போன்றவளாம் -
அப்படியா?
ஐந்து லட்சம்
அதிகம் தந்தால்
'அட்ஜஸ்ட்' பண்ணிக்கலாமாம்..

சீதன அரக்கனை
அழித்தொழித்து
ஆண்களிடமிருந்தான
அடிமைச் சங்கிலியைத்(?)
தகர்த்தெறியப் போவதாய்
ஆர்ப்பரிக்கும்
பெண்ணிய வாதிகளே..

இங்கே நான், ஒரு ஆண்
விற்கப் படுகிறேன்

எனக்குள்ளும், ஒரு தலையாயக்
காமன் கணை எய்து
காதல் நரம்புகளின்
தொழிற்பாட்டைத்
தொடக்கி வைத்த
காதலியின் நினைவுகளை,
காதலின் உணர்வுகளை
காற்றினிலே கரைத்து விட்டு,
என் ஆசைகளை
அபிலாசைகளை
அனலினிலே
தகித்து விட்டு,
பத்தரை மாற்றுத்
தங்கமாய் - ஒரு
பத்தினியிடம்
விற்பதற்காகப்
பத்திரமாய்
வைக்கப்பட்டிருக்கிறேன்..

எல்லாம் சரி..
நான் விற்கப்படுவது
எதற்காய்த் தெரியுமா?

என் கூடப் பிறந்த
சகோதரிகட்கு
மாப்பிள்ளைகள்
வாங்குவதற்காய்

என் அன்னை
என்னை விற்கிறாள் -
என் மனைவியாய்
அமையப் போகிறவளுக்கு

ஆம்! இங்கே நான்
விற்கப்படுகிறேன்
நங்கை ஒருத்தியால்
மங்கை ஒருத்திக்கு
மரணித்துப் போன
மன உணர்வுகளுடன்..

- வல்லிபுரம் சுகந்தன்..
பேராதனைப் பல்கலைக்கழக இளங்கதிர் 33 வது ஆண்டு மலரிலிருந்து..

புதுமையும் பழைமையும்


விஜயதசமி சாப்பாடு என் சாப்பாட்டு மேசையில்.. ;;)

Sunday, October 07, 2007

காண்பது கனவா... நனவா?

ஓரிரு வாரங்களுக்கு முன் சக்தியில் Duet படம் போட்ட அன்று தான் முதன் முதலாக கவனித்தேன்... படத்தின் காட்சிகள் அடிக்கடி மறைக்கப்பட்ட அதே வேளை ஒலி மட்டும் சீராக கேட்டது.

சன் ரீ.வீயில் இருந்து பதிவு செய்யும் போது ஏதும் தவறு நடந்து விட்டதோ என்று முதலில் நினைத்தாலும் பின்னரும் அடிக்கடி காட்சிகள் மறைக்கப்பட ஒன்றும் புரியாமல் விழித்தேன்.. இன்று தான் அதற்கான விடை
கிடைத்தது...

இன்று ஒளிபரப்பான திரைப்படத்திலும் அவ்வாறு பல காட்சிகள் மறைக்கப்பட்டன, கீழே இந்த வாசகத்துடன்...
"This is due to Government Regulation on Tobacco and Alcohol"

Polythene பாவனையைத் தடை செய்த மகிந்த அரசாங்கம் இதற்கான தடையையும் கடந்த வருடம் மார்கழி முதலாம் திகதி முதல் அமுலுக்கு கொண்டு வந்தது..

புகைத்தல் மற்றும் மதுபானம் குறித்த விளம்பரங்களை ஊடகங்களின் மூலமோ சுவரொட்டிகள் விளம்பர பதாதைகளின் மூலமோ விளம்பரம் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு வருடமாகும் நிலையில் இப்போது தான் தொலைக்காட்சியில் காட்சிகள் மறைக்கப்படுகின்றன.
கொண்ட நோக்கம் இதன் மூலம் அடையப்படுமா என்ற சந்தேகம் இருக்கின்ற போதும் படம் பார்க்கும் போது எரிச்சலைக் கிளப்புகின்ற போதும் இதனை முழுமையாக வரவேற்கிறேன்..

பொது இடங்களில் புகைத்தல் மற்றும் மதுபாவனையில் ஈடுபடுவோர் குற்றவாளிகளாக காணப்படின் அவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாவுக்கு மேற்படாத அபராதம் ஒரு ஆண்டுக்கு மேற்படாத சிறைத்தண்டனை அல்லது இவையிரண்டும் வழங்கப்படும்

இவையும் அந்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் இன்னமும் முழுமையாக செயற்படுவதாக தெரியவில்லை...

எப்போதும் போல, பொது இடங்களில் புகைப் பிடிக்கிறார்கள்.. .. புகைப்பிடித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது என்ற வாசகம் ஒட்டப்பட்ட நிலையில் Bus ஓட்டுநரே புகைப்பிடிப்பதை இப்போதும் காண முடிகிறது.

புகைப் பிடிக்காதவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த செயற்பாட்டை நிறுத்தும் வகையில் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்.. பார்ப்போம்..

Wednesday, October 03, 2007

இலங்கை அரசியல்வாதிகள் facebook இல்...

முன்செலுத்தப்பட்ட மடல் ஒன்றிலிருந்து....