Thursday, January 03, 2008

தண்டிப்பாரா கடவுள்?

அப்போது அந்தக் குழந்தைக்கு ஒன்றரை வயது. கோயில் திருப்பணி செய்யச் செல்லும் அம்மம்மாவுடன் அந்தக் குழந்தையும் சென்றிருந்தது. கோயில் மணியிலிருந்து நீண்டு வந்த கயிறு குழந்தையின் கைக்கெட்டும் தூரத்திலிருக்கவே அந்தக் குழந்தை கயிற்றை இழுத்து விளையாடியது. மணியொலி பிடித்துப் போக மேலும் ஓரிரு தடைவைகள் அதனை தொடர்ந்தது.. மணிச்சத்தம் கேட்டு வந்த அம்மம்மா ஐயோ.. பூஜை செய்யாத நேரம் மணியடிக்கக் கூடாது என்று அந்தக் குழந்தைக்கு சொல்லி வீட்டுக்கு கூட்டி வந்தார்.

வீட்டுக்கு வந்த குழந்தை அழுகையுடன் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளியினை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது.. யாருக்கும் எதுவுமே புரியவில்லை.. குழந்தையை வைத்தியரிடம் அழைத்துச் சென்றார்கள். வைத்தியருக்கும் எதுவும் புரியவில்லை. நீரை நோக்கி செல்வதால் குழந்தைக்கு எரிவு ஏற்பட்டிருக்குமோ என்று சோதித்துப் பார்த்தால் உடலில் எந்த அறிகுறியும் இல்லை.. வீட்டுக்கு குழந்தையைக் கொண்டு வந்தாயிற்று. குழந்தை இன்னமும் அழுகையை நிறுத்தியபாடில்லை.

அப்போது வீட்டில் மின்விசிறி இருக்கவில்லை. உடனடியாக மின்விசிறி வாங்கி குழந்தையின் மீது காற்றுப் படும்படியாக வைத்த போதும் பயனேதுமில்லை.

இறுதியில் அம்மப்பா கோயிலில் இருந்து திருநீறு கொண்டு வந்து குழந்தைக்கு பூசினார். என்ன அதிசயம்.. அதுவரை கதறிக் கொண்டிருந்த குழந்தை எதுவுமே நடக்காத மாதிரி தன்பாட்டில் விளையாடத் தொடங்கியது.

அந்தக் குழந்தை என் அண்ணன். இந்தக் கதை என் அம்மாவினால் எனக்குக் கூறப்பட்டது..
கோயில் மணியினை குழந்தை அடித்ததற்கு தண்டனையாக குழந்தைக்கு கடவுள் எரிவினைக் கொடுத்து அது தவறு என் காட்டியுள்ளார் என்பது அவர்களது நம்பிக்கை. பெரிதாக மூடநம்பிக்கை இல்லாதவரென்றாலும் இப்படி சிலதை நம்புகிறார்.

அவர்களது நம்பிக்கை உண்மையானால்...
மற்றையவைகளை விடுவோம்.. ஆனால் 01.01.2008 இல் தன் சந்நிதியில் பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் கொல்லப்பட்ட போதும் 25.12.2005 தேவாலயத்தில் ஜோசப் பரராஜசிங்கம' கொல்லப்பட்ட போதும் இந்தக் கடவுளர்கள் எங்கே சென்று விட்டார்கள்?

தன் கோயில்கள் இடிக்கப்பட்ட போதும் தேவாலயங்கள் மீது குண்டுகள் பொழிந்த போதும் தன் இருப்பிடங்களையும் தன்னிடம் தஞ்சமடைந்த மக்களையும் காத்துக் கொள்ள முடியாமல் ஏன் போனது கடவுளால்...

அறியாத வயதில் தெரியாமல் அந்தக் குழந்தை செய்த தவறிற்கு அப்படியொரு தண்டனை கொடுத்திருந்தால் கொலைகாரர்களிற்கும் கொலை செய்யத் தூண்டியவர்களிற்கும் என்ன தண்டனை கொடுத்திருக்கிறார் கடவுள்?

கொலை செய்யத் தூண்டியவர்கள் இன்னுமின்னும் கொலை செய்வதைத் தடுக்காத கடவுள் அப்படியொரு அற்ப விஷயத்திற்கு குழந்தைக்கு தண்டனை கொடுத்திருப்பாரோ...

Note: இது ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் கொண்ட கதை.. இன்னும் பல இவ்வாறான கதைகள் என் வீட்டாரிடமிருந்தும் அறிந்தவர்களிடமிருந்தும் அவர்கள் தம் அனுபவமாக சொல்லக் கேட்டிருக்கிறேன். ..
அறியாத வயதில் வேறு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டுக் குழந்தை கத்தியிருக்கும்.. காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதையாக திருநீறு பூச குழந்தை அழுகையை நிறுத்தியிருக்கும் என்பதை விடுத்து நம்புபவர்களின் நம்பிக்கை உண்மையானால் ஏன் இப்போது இந்தக் கடவுள் அமைதியாக இருக்கிறார்?

தெய்வம் நின்று கொல்லப் போகிறதோ?

4 comments:

said...

//கொலை செய்யத் தூண்டியவர்கள் இன்னுமின்னும் கொலை செய்வதைத் தடுக்காத கடவுள் அப்படியொரு அற்ப விஷயத்திற்கு குழந்தைக்கு தண்டனை கொடுத்திருப்பாரோ...//

கடவுளுக்கும் அவங்களுக்கும் ஒரு 'செட் ஃபிட்' இருந்தா அவர் ஒரு 'சைட் சப்போட்' குடுக்க வாய்ப்பிருக்கு...
அவருக்கு 'பகா' குடுக்கிறதுக்கு உண்டியல், அர்ச்சனை சீட்டு எண்டு பல வழிகள் இருக்கு தானே...

வேற என்னத்த சொல்ல... :D

said...

கடவுள்னு ஒண்ணு இருந்தா, இப்போ உலகத்தில் நடக்குற அனியாயங்கள் நடக்காது சகோதரி!

ஒண்ணுமறியாத குழந்தையை தண்டிப்பதுதான் கடவுள் என்றால், நான் அந்தக் கடவுளை மறுக்கிறேன்!!

said...

எப்போதாவது ஒரு சிங்கம் இன்னொரு சிங்கத்தை அடித்து கொன்றிருக்கின்றதா ? அல்லது புலி... ஆனால் இந்த ஆறு அறிவு படைத்த மனித மிருகந்தான் மனிதனை மனிதன் கொன்று குவிக்கின்றான். அதிலும் மிகப்கொடிய விசயம் தமிழனை தழிழனே கொல்வதுதான்... இதற்குப்போய் கடவுளைக் குற்றம் சொல்வானேன்... மனிதத்தை மூளையின்றிப் படைத்திருக்கலாம், இதயமின்றிப் படைத்ததைவிட...

said...

ம்.........

கடவுளுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்??